செய்திகள்
ஜாப்ரா ஆர்சர்

ஜாப்ரா ஆர்சர் மீது இனவெறி தாக்குதல்: மன்னிப்பு கேட்டது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்

Published On 2019-11-26 08:31 GMT   |   Update On 2019-11-26 08:31 GMT
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்சரை ரசிகர் ஒருவர் இனவெறியுடன் திட்டியதாக எழுந்த புகாரை தொடர்ந்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கேட்டுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் மவுண்ட் மவுங்கானுயில் நேற்று முடிந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

இந்த போட்டி முடிந்ததும் பெவிலியன் திரும்பிய இங்கிலாந்து அணிக்காக விளையாடும் வெஸ்ட் இண்டீஸில் பிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஜாப்ரா ஆர்சரை நோக்கி ரசிகர் ஒருவர் இனவெறியுடன் அவமரியாதையாக திட்டியதாக கூறப்படுகிறது. அவர் ஜாப்ரா ஆர்சரின் நிறத்தை குறிப்பிட்டு வசைபாடி இருக்கிறார்.

இதுகுறித்து ஜாப்ரா ஆர்சர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘எனது அணியை காப்பாற்ற பேட்டிங் செய்து போராடி விட்டு ஆட்டம் இழந்து வெளியேறுகையில் எனக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் இன ரீதியான விமர்சனத்தை எதிர்கொண்டேன். அந்த ஒருவரை தவிர ரசிகர்கள் அனைவரும் அருமையாக நடந்து கொண்டனர். வழக்கம் போல் இங்கிலாந்து ரசிகர்கள் நல்ல ஊக்கம் அளித்தனர்’’ என்று தெரிவித்து இருந்தார்.

இந்த சம்பவம் குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதல் டெஸ்ட் போட்டியில் ஜாப்ரா ஆர்சரை ரசிகர் ஒருவர் வார்த்தையால் அவமரியாதை செய்ததாக எழுந்துள்ள புகார் எங்களுக்கு அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது. இங்கிலாந்து கிரிக்கெட்டில் எங்களுக்கு எதிரியாக இருக்கலாம். ஆனாலும் அவர்கள் எங்களது நண்பர்கள். இன ரீதியான அவமரியாதையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்காக ஜாப்ரா ஆர்சரிடம் மன்னிப்பு கோருகிறோம். நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஜாப்ரா ஆர்சரை நாளை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்கும்.

இந்த குற்றத்தை செய்த ரசிகர் மைதானத்தை விட்டு உடனடியாக வெளியேறி விட்டதால் அவர் யார்? என்பதை பாதுகாவலர்களால் கண்டறிய முடியவில்லை. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஸ்டேடியத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நபர் யார்? என்பதை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கும்.

மைதானங்களில் அவமரியாதையான மற்றும் மோசமான வார்த்தையில் திட்டுவதை துளியும் அனுமதிக்க முடியாது. இந்த விசாரணையின் முன்னேற்றம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்படும். ஜாப்ரா ஆர்சருக்கு ஏற்பட்ட அனுபவம் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். ஹாமில்டனில் நடைபெறும் அடுத்த டெஸ்ட் போட்டியில் இந்த விவகாரத்தில் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்படுவோம் என்று உறுதி அளிக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News