வழிபாடு
ராமர், கிருஷ்ணன்

அஷ்டமி, நவமியில் புது முயற்சி செய்யலாமா?

Published On 2022-04-12 05:40 GMT   |   Update On 2022-04-12 08:50 GMT
பொதுவாக ஒரு காரியத்தை தொடங்கும்போது இன்று அஷ்டமி, நவமியாக இருக்கிறது. வேறொரு நல்ல நாள் பார்த்து புது முயற்சி செய்யலாம் என்று மக்கள் அனைவரும் சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.
ராமர் பிறந்தது நவமி திதி என்பதால் ராமநவமி என்று அழைக்கப்படுகிறது. நாம் நமது பிறந்தநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுவது போல இறைவன் பிறந்த நாளையும் மகிழ்ச்சியோடு கொண்டாடினால் இனிய வாழ்க்கை நமக்கு அமையும். எல்லாநாட்களும் நல்ல நாட்களாக மாறும்.

அப்படிப்பட்ட தெய்வத்தின் பிறந்த நாள் நவமியாக இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். பொதுவாக ஒரு காரியத்தை தொடங்கும்போது இன்று அஷ்டமி, நவமியாக இருக்கிறது. வேறொரு நல்ல நாள் பார்த்து புது முயற்சி செய்யலாம் என்று மக்கள் அனைவரும் சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.

இதை அறிந்த அஷ்டமி, நவமி ஆகிய 2 திதிகளும் மிகவும் கவலைப்பட்டு இறைவனிடம் முறையிட்டதாம். உடனே இறைவன் உங்கள் இருவரையும் கொண்டாடும் விதத்தில் ஒரு செயல் செய்கின்றேன் என்று சொல்லி அஷ்டமியன்று கண்ணன் அவதாரம் எடுத்த நாளாக அமைத்தார். நவமியன்று ராமர் அவதாரம் செய்த நாளாக அமைத்தார்.

இந்த 2 திதிகளும் சந்தோஷப்பட்டன. நம்மை மக்கள் கொண்டாட இறைவன் அவதரித்த நாளாக மாற்றிவிட்டதை அறிந்து மகிழ்ச்சிக் கடலில் மிதந்தன. எனவே நாம் 2 திதிகளையும் ஒதுக்க வேண்டியதில்லை.

அஷ்டமி திதியில் முக்கியமான காரியத்தை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் வந்தால் அன்று கண்ணபிரானை வணங்கிய பிறகுகாரியத்தை தொடங்கலாம். அதே போல நவமி திதியில் ஒருகாரியத்தை செய்தே தீரவேண்டும் என்ற நிர்ப்பந்தம் வந்தால் ராமபிரான்,சீதாதேவி, அனுமன் ஆகியோரை வழிபட்டுவிட்டு காரியத்தை செய்யலாம்.

திருமணம் மற்றும் கிரகப்பிரவேசம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு அஷ்டமி, நவமி நாட்களை தேர்ந்தெடுக்காவிட்டாலும் நடைமுறையில் செய்யும் மற்ற காரியங்களுக்கு அந்தத் திதிக்குரிய தெய்வங்களை வழிபட்ட பிறகு காரியத்தை தொடங்கினால் வெற்றி கிடைக்கும் என்பதை அனுபவத்தில் நீங்கள் உணரலாம்.

அனுமனை வழிபடுகிறபோது அவருக்கு வெற்றிலைமாலை அணிவித்தால் வெற்றி கிடைக்கும். துளசி மாலை அணிவித்தால் துயரம் விலகும். ராமஜெயம் மாலை அணிவித்தால் சகலமும் ஜெயமாகும். சனி ஆதிக்கம் இருப்பவர்கள் அனுமனை வழிபட்டால் தடைகள் அகலும். தனவரவும் திருப்தி தரும்.
Tags:    

Similar News