செய்திகள்
4 டவர்ஸ் கட்டிடங்கள் தக்க பாதுகாப்பு அம்சங்களுடன் நேற்று வெடிவைத்து தகர்க்கப்பட்டது

அபுதாபியில், 144 தளங்கள் கொண்ட 4 கட்டிடங்கள் வெடிவைத்து தகர்ப்பு- 10 வினாடிகளில் தரைமட்டமானது

Published On 2020-11-28 03:48 GMT   |   Update On 2020-11-28 03:48 GMT
அபுதாபி மினா ஜாயித் பகுதியில் உள்ள ‘மீனா பிளாசா’ என்ற வளாகத்தில் கட்டப்பட்டு வந்த 4 கட்டிடங்கள் வெடிவைத்து 10 வினாடிகளில் தகர்க்கப்பட்டது.
அபுதாபி:

அபுதாபியில் மினா ஜாயித் பகுதியானது புதிய சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மேம்படுத்தப்பட உள்ளது. மேலும் இந்த பகுதி வர்த்தகம் மற்றும் குடியிருப்புகளுக்கு ஏற்ற வகையில் புதிய கட்டுமான திட்டங்களுடன் மாற்றப்பட உள்ளது.

‘மீனா பிளாசா’ வளாகத்தில் கட்டப்பட்டு இருந்த 4 டவர்ஸ் கட்டிடங்களின் கட்டுமான பணிகள் 2 லட்சத்து 46 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் அந்த கட்டிடத்தின் முதலீட்டாளர்கள் மற்றும் மலேசிய கட்டுமான நிறுவனத்திற்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 2015-ம் ஆண்டு இந்த திட்டம் கைவிடப்பட்டது. கடற்கரை பகுதி அருகே பாதியில் கைவிடப்பட்ட அந்த 4 கட்டிடங்களில் மொத்தம் 144 தளங்கள் உள்ளது.

இதையடுத்து, அபுதாபி மாநகராட்சி சார்பில் அந்த பகுதி கையகப்படுத்தப்பட்டு சுற்றுலா மேம்பாட்டு பகுதியாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இந்த கட்டிடங்களை இடிக்க ஏற்கனவே இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் ஒத்திகை பார்க்கப்பட்டது. சோதனை வெற்றியடைந்ததால், நேற்று கட்டிட இடிப்பு நிறுவனத்தின் ஒத்துழைப்பில் அந்த 4 கட்டிடங்களும் போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு இடையே வெற்றிகரமாக இடிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த கட்டிடங்கள் இடிக்கப்படுவதை முன்னிட்டு நேற்று காலை 6 மணியில் இருந்து ஷேக் ஜாயித் சுரங்கப்பாதையின் இருவழிச்சாலை, ஷேக் கலீபா பின் ஜாயித் சாலையில் இருந்து ஷேக் கலீபா பாலம், அல் மர்யா தீவில் இருந்து துறைமுகம் செல்லும் ஹம்தான் பின் முய்கம்மது சாலை உள்பட அனைத்தும் மூடப்பட்டது. அதேபோல் கடற்கரை சாலையின் போக்குவரத்து ஷேக் ஜாயித் சாலைக்கு திருப்பி விடப்பட்டது. அந்த சாலைகளின் முகப்புகளில் பொதுமக்கள் யாரும் உள்ளே நுழைந்து விடாத வகையில் போலீசார் பலத்த பாதுகாப்பு செய்திருந்தனர்.

கட்டிடம் இடிக்கப்படும் வரை இந்த சாலைகள் மூடப்பட்டு இருந்தது. அதேபோல் கட்டிடம் இடிக்கப்படும் பகுதியில் உள்ள கடைகள் நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் நேற்று மாலை 4 மணி வரை மூட உத்தரவிடப்பட்டது. இதன் காரணமாக அங்கு மனித நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அந்த பகுதியில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் கட்டிடத்தின் ஒவ்வொரு தளங்களிலும் துளையிடப்பட்டு வெடிமருந்து வைக்கப்பட்டது. குறிப்பாக கட்டிடத்தை உறுதியாக தாங்கி நிற்கும் தூண்களில் வெடிமருந்து வைக்கப்பட்டது. புகையில்லாமல் வெடிக்கும் கார்டைட் என்ற ரசாயனம் வெடிமருந்துக்காக இதில் பயன்படுத்தப்பட்டது. சாதாரணமாக துப்பாக்கி குண்டுகளில் இந்த வகை ரசாயனம் வெடிமருந்தாக பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சரியாக நேற்று காலை 8 மணியளவில் பேட்டரி மின்சாரத்தின் உதவியால் வெடிமருந்து வெடிக்க வைக்கப்பட்டது. தட்...தட்..தட் என்ற பலத்த வெடிச்சத்தத்துடன் 10 வினாடிகளில் கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. சிறுது நேரத்தில் அந்த பகுதி கட்டிடமின்றி வெற்றிடமாக காட்சியளித்தது.

கட்டிடங்கள் இடிக்கப்பட்ட பகுதியில் நவீன வசதிகளுடன் முதற்கட்டமாக மீன் மார்க்கெட் அமைக்கப்படும். அதனை தொடர்ந்து குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்களுக்கான கட்டுமானங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடங்கள் சுற்றுலாவுக்காக மேம்படுத்தப்பட உள்ளதாக அபுதாபி மாநகராட்சி தகவல் அளித்துள்ளது.
Tags:    

Similar News