செய்திகள்
ஜோ ரூட்

ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் இங்கிலாந்து 476 ரன் குவிப்பு

Published On 2019-12-02 07:16 GMT   |   Update On 2019-12-02 07:16 GMT
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் இங்கிலாந்து அணி 476 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
ஹேமில்டன்:

நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹேமில்டனில் நடைபெற்று வருகிறது.

நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 375 ரன் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 269 ரன் எடுத்து இருந்தது.
கேப்டன் ஜோரூட், தொடக்க வீரர் பர்னஸ் (101 ரன்) ஆகியோர் சதம் அடித்து இங்கிலாந்து அணியை நெருக்கடியில் இருந்து மீட்டனர்.

ஜோரூட் 114 ரன்னும், ஒலிபோப் 4 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 106 ரன்கள் பின்தங்கிய நிலை, கைவசம் 5 விக்கெட் என்ற கணக்கில் இங்கிலாந்து தொடர்ந்து ஆடியது.

ஜோரூட் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினார். அவர் 335 பந்துகளில் 18 பவுண்டரியுடன் 150 ரன்னை தொட்டார். அவருக்கு போப் எல்லா வகையிலும் உதவியாக இருந்தார்.

இந்த ஜோடி நிதானமாக ஆடி 100 ரன்னை சேர்த்தது. மதிய உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 375 ரன்னை தாண்டி முன்னிலை பெற்றது. போப் 167 பந்தில் 4 பவுண்டரியுடன் 50 ரன்னை எடுத்தார். 4-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது முதல் அரை சதமாகும்.

மறுமுனையில் இருந்த ஜோரூட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதம் அடித்தார். 412 பந்துகளில் 200 ரன்னை எடுத்தார். இதில் 22 பவுண்டரிகள் அடங்கும். 88-வது டெஸ்டில் விளையாடும் ஜோரூட்டுக்கு 3-வது இரட்டை சதம் இதுவாகும். இதற்கு முன்பு 2014-ல் இலங்கைக்கு எதிராக லார்ட்ஸ் டெஸ்டில் 200 ரன்னும் (அவுட்இல்லை), 2016-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்டில் 254 ரன்னும் எடுத்து இருந்தார்.

இந்த ஜோடியை வாங்கர் பிரித்தார். போப் 75 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 455 ஆக இருந்தது. 6-வது விக்கெட் ஜோடி 193 ரன் எடுத்தது முக்கியமானது. அதை தொடர்ந்து கேப்டன் ஜோரூட்டும் வெளியேறினார். அவர் 441 பந்துகளில் 22 பவுண்டரி, 1  சிக்சருடன் 226 ரன்கள் குவித்தார்.

இங்கிலாந்து அணி 162.5 ஓவரில் 476 ரன் குவித்து ‘ஆல்அவுட்’ ஆனது. இது நியூசிலாந்து அணியின் ஸ்கோரைவிட 101 ரன் கூடுலாகும். வாக்னர் 5 விக்கெட்டும், சவுத்தி 2 விக்கெட்டும் எடுத்தனர்.

101 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை ஆடியது. 28 ரன்னில் அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஆட்டம் இழந்தனர்.

ராவல் ரன் எதுவும் எடுக்காமல் சாம்கரண் பந்திலும், டாம் லாதம் 18 ரன்னில் வோக்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தனர்.
Tags:    

Similar News