ஆன்மிகம்
கோவில்களில் சிறப்பு பூஜைகள்

சமயபுரம், திருவானைக்காவல், உறையூரில் கோவில்களில் சிறப்பு பூஜைகள்

Published On 2019-08-17 05:59 GMT   |   Update On 2019-08-17 05:59 GMT
ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டால் அம்மன் குளிர்ந்த மனதோடு பக்தர்கள் கேட்கும் வரங்களை கொடுப்பதோடு சிறந்த நற்பலன்கள் உண்டாகும் என்பது ஐதீகம். நேற்று ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் சமயபுரம் மாரியம்மன் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நேற்று ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு காலை 5 மணியிலிருந்து ஏராளமான பக்தர்கள் சமயபுரத்திற்கு வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் பலர், தங்கள் குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து வந்தும், அக்னி சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

இதுபோல அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் நடை அதிகாலை 3 மணிக்கே திறக்கப்பட்டது. சிறு, சிறு பூஜை கால இடைவெளிக்கு பின்னர் தொடர்ந்து நள்ளிரவு வரை சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்றன. நேற்று அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர்.

நேற்று அகிலாண்டேஸ்வரி அம்மன் தாழம்பூ பாவாடை அணிந்து மலர்கீரிடம் சூடி, காதுகளில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரம் பொறிக்கப்பட்ட தாடகங்கள், கையில் தங்கக்கிளி மற்றும் திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் அம்மன் காலையில் புஷ்பபாவாடையில் மகாதுர்காவாகவும், மதியம் தாழம்பூ பாவாடையில் மகாலட்சுமியாகவும், மாலையில் வெட்டிவேர்பாவாடையில் சரஸ்வதியாகவும் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

மேலும் வானமே மேற்கூரையாக கொண்ட உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே குவிந்தனர். அம்மன் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் பலர் பால்குடம் எடுத்து வந்தும், அக்னி சட்டி ஏந்தி வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பகல் 12 மணிக்கு மேல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில் உள்பட மாநகரில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன்கள் அருள்பாலித்தனர்.

இதுபோல் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. 
Tags:    

Similar News