செய்திகள்
ஆனந்தவேலு

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

Published On 2021-01-19 21:36 GMT   |   Update On 2021-01-19 21:36 GMT
கட்டுமான பொருட்கள் விற்பனை தொடர்பாக ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலுவை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
நீலகிரி:

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நாடுகாணி சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடி வழியாக கேரளாவில் இருந்து கற்கள், எம்-சான்ட் மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன. இதன்படி, மலப்புரம் மாவட்டம் நிலம்பூரை சேர்ந்த பின்ஸ் எலியாஸ் என்பவர் தனக்கு சொந்தமான 18 மினி லாரிகளில் கட்டுமான பொருட்களை கொண்டு வந்து சேரம்பாடி, சேரங்காடு உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில் சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு (வயது 50), பின்ஸ் எலியாசிடம் கட்டுமான பொருட்களை விற்பனை செய்ய வேண்டுமானால் ரூ.40 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பின்ஸ் எலியாஸ் ரூ.20 ஆயிரம் தருவதாக கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தார். பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய பணத்தை பின்ஸ் எலியாசிடம் கொடுத்தனர். இதையடுத்து அவர் நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டரை சந்தித்து ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை கொடுத்தார்.

அதை வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலுவை கையும், களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் இருந்த ரசாயன பவுடர் தடவிய பணத்தை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News