ஆன்மிகம்
தேர் இழுக்க தடைவிதிப்பதாக கூறியதால் பக்தர்கள் கோவிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குண்டம் இறங்க, தேர் இழுக்க தடையா?: ஊஞ்சலூர் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காத்திருப்பு போராட்டம்

Published On 2021-03-10 07:31 GMT   |   Update On 2021-03-10 07:31 GMT
ஊஞ்சலூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் குண்டம் இறங்கவும், தேர் இழுக்கவும் தடைவிதிப்பதாக கூறியதால் பக்தர்கள் கோவிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊஞ்சலூரில் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் விழாவும், தேர்த்திருவிழாவும் சிறப்பாக நடைபெறும். கடந்த ஆண்டு கோவில் திருவிழாவுக்கு பூச்சாட்டப்பட்ட நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக திருவிழா நிறுத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் மனவேதனை அடைந்தார்கள்.

இந்தநிலையில் இந்த ஆண்டு வருகிற 24-ந் தேதி குண்டம் விழாவும், 25-ந் தேதி தேர்த்திருவிழாவும் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வந்தன.

இந்தநிலையில் கோவில் செயல் அதிகாரி உமாதேவி நேற்று முன்தினம் கோவில் நிர்வாகிகளிடம், திருவிழா நடத்துவது குறித்து கலெக்டர் கதிரவனிடம் தகவல் தெரிவித்ததாகவும், அதற்கு அவர் குண்டம் ஒருவர் மட்டுமே இறங்க வேண்டும் என்றும், தேரை பக்தர்கள் இழுக்க கூடாது என்று நிபந்தனைகள் விதித்ததாகவும் கூறினார்.

இதைக்கேட்ட கோவில் நிர்வாகிகள் மற்றும் முறைதாரர்கள், பக்தர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுபற்றி தகவல் பரவியதும் ஊஞ்சலூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஒன்று திரண்டு வந்து கோவில் முன்பு நேற்று முன்தினம் இரவு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதையறிந்ததும் கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ஊஞ்சலூர் மாரியம்மன் கோவிலுக்கு விரைந்து சென்றார்கள். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம், காலையில் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறி அவர்களை கலைந்து போகச்செய்தார்கள்.

அதன்படி நேற்று காலை கோவிலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது கோவில் செயல் அதிகாரி உமாதேவி, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக குண்டத்தில் ஒருவர் மட்டுமே இறங்கவேண்டும். தேரை பக்தர்கள் இழுக்காமல் பூஜை மட்டும் நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

அதற்கு பக்தர்கள், "ஈரோடு மாவட்டத்தில் பல கோவில்களில் அடுத்தடுத்து திருவிழாக்கள் நடைபெற்று முடிந்து விட்டன. கடந்த ஆண்டும் எங்கள் ஊரில் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டும் எங்கள் ஊரில் திருவிழா நடத்தவில்லை என்றால் எப்படி?, வேண்டுதல் வைத்து, விரதம் இருக்கும் பக்தர்களை குண்டம் இறங்கவும், தேர் இழுக்கவும் அனுமதிக்க வேண்டும். இல்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம்" என்று கூறினார்கள்.

அதற்கு கோவில் செயல் அதிகாரி உமாதேவி, இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் பேசுகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

இந்த சம்பவம் ஊஞ்சலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News