செய்திகள்
பண மோசடி

பரிசு விழுந்ததாக கூறி வாலிபரிடம் ரூ.1¼ லட்சம் மோசடி - போலீசில் புகார்

Published On 2021-10-17 09:19 GMT   |   Update On 2021-10-17 09:19 GMT
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை அருகே வாலிபரிடம் பரிசு விழுந்ததாக கூறி ரூ.1.31 லட்சம் மோசடி செய்த கும்பல் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம்:

திருஉத்தரகோசமங்கை அருகே உள்ள மாலங்குடியை சேர்ந்தவர் ராமமூர்த்தி என்பவரின் மகன் சத்தியராஜ் (வயது 29). இவர் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் பாட்டு கேட்கும் ஹெட்போன் வாங்கி உள்ளார். இதன்பின்னர் அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் ஹெட்போன் வாங்கிய உங்களுக்கு எங்களின் நிறுவனத்தின் குலுக்கல் முறையில் ரூ.5 லட்சம் பரிசு விழுந்திருப்பதாக கூறி ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். தங்களின் நிறுவனம் தேர்ந்தெடுத்த பல ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களில் நீங்கள்தான் அதிர்ஷ்டசாலி என்றும் உடனடியாக உங்களின் வங்கி கணக்கு மற்றும் சுயவிவரங்கள் தெரிவித்தால் பரிசுத்தொகையை அனுப்பிவிடுவதாக கூறியுள்ளார். சாதாரண ஹெட்போன் வாங்கியதற்கு ரூ.5 லட்சம் பரிசா என்று ஆச்சர்யப்பட்டு மகிழ்ச்சியில் திகைத்து வாயடைத்துபோன சத்தியராஜ் அந்த பரிசுத்தொகையை பெற்றுவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்துள்ளார்.

அப்போது மறுமுனையில் பேசிய மர்ம நபர் அந்த பரிசுத்தொகையை பெற வேண்டும் என்றால் பதிவு கட்டணம் ரூ.8 ஆயிரத்து 500, நடைமுறை கட்டணம் ரூ.25 ஆயிரம், மாநில வரி தொகை ரூ.70 ஆயிரம் என அடுத்தடுத்து கேட்டுள்ளார். ரூ.5 லட்சம் கிடைக்க போகிறதே இந்த தொகையை செலுத்திவிடலாம் என்று அடுத்தடுத்து அவர் கேட்டபடி தொகையை செலுத்தி உள்ளார். தொடர்ந்து பணம் கேட்டு வந்ததால் ஒருகட்டத்தில் சுதாரித்து கொண்ட சத்தியராஜ் தனக்கு பரிசுத்தொகை எதுவும் வேண்டாம் தான் செலுத்திய தொகையை திருப்பி தாருங்கள் என்று கேட்டுள்ளார்.

அந்த தொகையை திருப்பி செலுத்த வேண்டும் என்றால் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய கட்டணமாக ரூ.22 ஆயிரத்து 900 செலுத்த வேண்டும் என்றும் மேலும், ரிசர்வ் வங்கி அபராத தொகை ரூ.4 ஆயிரத்து 500 செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளர். இதோடு முடித்து கொள்வோம் என்று அந்த தொகையையும் செலுத்தி உள்ளார். இதன்பின்னர் அந்த மர்ம நபரின் செல்போன் எண் இணைப்பு துண்டிக்கப்பட்டு அணைத்து வைக்கப்பட்டு விட்டது. இதனால் சத்தியராஜ் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 900 கட்டி ஏமாந்துவிட்டோம் என்று முடிவுக்கு வந்தார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சத்தியராஜ் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் மூலம் புகார் செய்தார். இதனடிப்படையில் ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து சத்தியராஜ் தொடர்பு கொண்ட எண்கள், வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News