விளையாட்டு
கோப்பு படம்

கொரோனா பாதிப்பால் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு

Published On 2022-01-19 06:03 GMT   |   Update On 2022-01-19 06:03 GMT
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மெல்போர்ன்:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சமீபத்தில் இங்கிலாந்துடன் ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடியது. 5 போட்டி கொண்ட இந்த தொடரை ஆஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா- நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் நடைபெறும் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டு உள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வருகிற 24-ந் தேதி முதல் பிப்ரவரி 9-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு இருந்தது.

முதல் போட்டி 30-ந் தேதி பெர்த்திலும், 2-வது ஒருநாள் போட்டி பிப்ரவரி 2-ந் தேதி ஹோபர்ட்டிலும், கடைசி ஒருநாள் போட்டி 5-ந் தேதி சிட்னியிலும், 20 ஓவர் ஆட்டம் பிப்ரவரி 8-ந் தேதி கான்பராவிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் விவாதித்து, முடிவெடுத்து இந்த தகவலை இன்று தெரிவித்தன.

இந்த போட்டி தொடர் எப்போது நடைபெறும் என்ற விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

ஆஸ்திரேலிய அணி இலங்கையுடன் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. வருகிற 11-ந் தேதி இந்த தொடர் தொடங்குகிறது. இந்த 20 ஓவர் தொடரும் ஒத்தி வைக்கப்படுமா? என்பது பின்னர் தெரியவரும்.

Tags:    

Similar News