செய்திகள்
விஜயகாந்த்

தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் நாளை அவசர ஆலோசனை

Published On 2021-03-08 07:08 GMT   |   Update On 2021-03-08 09:36 GMT
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நாளை காலை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெற உள்ளது.
சென்னை:

அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது.

கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 20 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான தே.மு.தி.க.வுக்கு மட்டும் தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாமல் உள்ளது. பா.ம.க.வுக்கு இணையாக 23 இடங்களை தங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என்று தே.மு.தி.க. பிடிவாதமாக இருந்ததே இதற்கு காரணமாக அமைந்து இருந்தது.

அதேநேரத்தில் அ.தி.மு.க. சார்பில் 23 இடங்கள் ஒதுக்க முடியாது என்றும், 15 முதல் 20 தொகுதிகள் வரை ஒதுக்குவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக இதுவரை 4 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இந்த பேச்சு வார்த்தையில் தே.மு.தி.க. தனது பிடிவாதத்தை தளர்த்தி இறங்கி வந்தது. 15 முதல் 20 இடங்களுக்குள் பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தது.

இந்தநிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேற்று தே.மு.தி.க. துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் பார்த்த சாரதி, அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். இந்த பேச்சுவார்த்தையில் தே.மு.தி.க.வுக்கான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது.

அந்த கட்சிக்கு 17 இடங்கள் வரை ஒதுக்குவதற்கு அ.தி.மு.க தலைமை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனுடன் ஒரு மேல்சபை எம்.பி. பதவியையும் கொடுக்க அ.தி.மு.க. சம்மதித்ததாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க. - தே.மு.தி.க. தொகுதி பங்கீடு உடன்பாடு இன்று எட்டப்படுகிறது. சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இரண்டு கட்சித் தலைவர்களும் உடன்பாட் டில் கையெழுத்து போடுகிறார்கள். இதன் மூலம் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வர உள்ளது.

இந்தநிலையில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்களுடன் நாளை (செவ்வாய்க்கிழமை) விஜயகாந்த் அவசர ஆலோசனை நடத்துகிறார். இதுதொடர்பாக தே.மு.தி.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நடைபெற உள்ள 2021 சட்டமன்ற பொதுதேர்தலையொட்டி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நாளை (9-ந் தேதி) காலை 10.30 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெற உள்ளது.

மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் ஆலோசனை கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாளை நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்களுடன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.

இந்த கூட்டத்தில் நாம் விரும்பும் அளவுக்கு தொகுதிகள் கிடைக்காவிட்டாலும் கட்சியினர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட உள்ளது.

வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை எவை என்பது பற்றியும் மாவட்ட செயலாளர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுகிறது.

தே.மு.தி.க. ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகளில் மீண்டும் போட்டியிட விரும்புகிறது. இதுதொடர்பாக தொகுதிகள் பட்டியலை யும் அந்த கட்சி தயாரித்து வைத்துள்ளது.

அதில் பெருவாரியான இடங்களை அ.தி.மு.க. தலைமையிடம் கேட்டு பெற்று விட வேண்டும் என்பதில் தே.மு.தி.க. உறுதியாக உள்ளது.

இதுதொடர்பாக நாளைய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News