செய்திகள்
கோப்புபடம்

சேலத்தில் பீடா கடையில் புகையிலை பொருட்கள், ரூ.15¾ லட்சம் பறிமுதல் - போலீசார் தீவிர விசாரணை

Published On 2020-10-18 10:08 GMT   |   Update On 2020-10-18 10:08 GMT
சேலத்தில் பீடா கடையில் இருந்து புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.15 லட்சத்து 77 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

சேலம் மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், லாட்டரி சீட்டுகள் போன்றவை விற்பனை செய்பவர்களை கைது செய்ய போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு லாட்டரி சீட்டுகள் விற்பவர்களையும் மற்றும் புகையிலை பொருட்கள், கஞ்சா போன்றவை விற்பவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சேலம் கோட்டை மெயின் ரோட்டில் உள்ள ஒரு பீடா கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு பீடா கடை நடத்தி வரும் வேலாயுதம் (வயது 47) என்பவரது கடையில் சோதனை நடத்தினர்.

அப்போது கடையில் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர அங்கு ரூ.15 லட்சத்து 77 ஆயிரமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து வேலாயுதத்தை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து புகையிலை பொருட்கள் எங்கு வாங்கப்பட்டது என்பது குறித்தும், ரூ.15 லட்சத்து 77 ஆயிரத்தை எதற்காக வைத்திருந்தார்? என்பது தொடர்பாகவும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்தில் பீடா கடையில் புகையிலை பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News