ஆன்மிகம்
ஹாசனாம்பா தேவி கோவில்

தீபாவளியையொட்டி மட்டுமே நடை திறக்கப்படும் ஹாசனாம்பா தேவி கோவிலுக்கு பக்தர்கள் வர தடை

Published On 2020-10-03 08:22 GMT   |   Update On 2020-10-03 08:22 GMT
கொரோனா பரவல் காரணமாக, ஆண்டுதோறும் தீபாவளியையொட்டி மட்டும் நடை திறக்கப்படும் ஹாசனாம்பா தேவி கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஆன்-லைனில் கோவில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்ய முடிவு செய்திருப்பதாகவும் கலெக்டர் கிரீஷ் தெரிவித்துள்ளார்.
ஹாசன் (மாவட்டம்) டவுனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா தேவி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சிறப்பு அம்சம் என்னவென்றால், ஆண்டுக்கு ஒரு முறை 12 நாட்கள் மட்டுமே கோவில் நடை திறக்கப்படும். அதுவும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹாசனாம்பா தேவி கோவில் திறக்கப்படும்.

மேலும் இந்த கோவிலில் நடை மூடப்படும் நாளில் தீபம் ஏற்றப்படும். மேலும் அம்மனுக்கு மல்லிகை பூ சாத்தப்படும். இந்த தீபம் அடுத்த ஆண்டு நடை திறக்கும் வரை அணையாமல் எரியும் என்பதும், பூ வாடாமல் இருக்கும் என்பதும் பக்தர்களால் நம்பப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நடப்பாண்டு ஹாசனாம்பா தேவி கோவில் நடை நவம்பர் 5-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை திறக்கப்பட உள்ளது.

இதுகுறித்து ஹாசன் கலெக்டர் கிரீஷ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தீபாவளியையொட்டி மட்டுமே திறக்கப்படும் ஹாசனாம்பா தேவி கோவில் நடை அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை திறக்கப்படுகிறது. எப்போதும் முதல் மற்றும் இறுதி நாள் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு ஹாசனாம்பா தேவியை பக்தர்கள் நேரில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் கவலைப்பட தேவையில்லை.

பக்தர்களின் வசதிக்காக ஆன்-லைன் மூலம் ஹாசனாம்பாதேவி கோவில் நிகழ்வுகள் ஒளிபரப்பு செய்யப்படும். மேலும் ஹாசன் டவுன் பகுதிகளில் அகன்ற திரைகளிலும் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும்.

எனவே பக்தர்கள் ஹாசனாம்பா தேவியை தரிசனம் செய்ய நேரில் வர வேண்டாம். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட பொறுப்பு மந்திரி, எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News