லைஃப்ஸ்டைல்
மோதல்களைத் தவிர்ப்பது எப்படி?

மோதல்களைத் தவிர்ப்பது எப்படி?

Published On 2019-07-29 03:01 GMT   |   Update On 2019-07-29 03:01 GMT
ஒரு பேருந்தில் பயணம், அலுவலக பணி, கணவன்-மனைவி உரையாடல், பதவி உயர்வு, பரம்பரைச் சொத்து விவகாரங்கள் என்று எதில் வேண்டுமானாலும் மோதல் ஏற்பட வாய்ப்புண்டு.
இரண்டு தனி மனிதர்கள் அல்லது இரண்டு குழுவினர்களுக்கு இடையில் ஏதேனும் ஒரு பொருள் குறித்து ஏற்படும் கருத்து வேறுபாடுகள்தான் கற்பனைக்கு எட்டாத மோதல்களை ஏற்படுத்துகின்றன. சின்னஞ்சிறிய அல்லது மிகப்பெரிய கருத்து வேறுபாடுகள் பெரும் மோதல்களை ஏற்படுத்தி விடுவது அன்றாடம் நாம் வாழ்வில் காணக் கூடிய காட்சியாகும். ஒரு பேருந்தில் பயணம், அலுவலக பணி, கணவன்-மனைவி உரையாடல், பதவி உயர்வு, பரம்பரைச் சொத்து விவகாரங்கள் என்று எதில் வேண்டுமானாலும் மோதல் ஏற்பட வாய்ப்புண்டு.

தான் பேச விரும்பிய செய்தியும், பேசுவதற்கு தேர்ந்து கொண்ட மனிதர்களும் சரியானவர்கள்தானா என்பதை நன்கு உறுதி செய்து கொண்ட பின்னரே பேச வேண்டும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்; அத்தகைய பேச்சில் தான் முரண்பாடுகள், மோதல்கள் ஏற்படாது என்பது திருவள்ளுவர் கருத்து. முரண்பாடான எண்ணங்கள் கொண்ட மனிதர்கள் இருக்கும் அவைகளில் பேசாமல் இருப்பதே நல்லது என்ற கருத்து தோன்றும்படி, “புல்லவையில் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்கு செலச் சொல்லுவார்” என்று திருவள்ளுவர் கூறுகிறார். மோதல்களைப் பேச்சின் மூலம் உருவாக்குவதை விட பேசாமல் இருப்பதே நல்லதல்லவா?

மோதல்கள் ஏற்படுவதை தடுப்பது குறித்து மேலை நாடுகளில் பல அறிஞர்கள் விரிவான ஆய்வுகளைச் செய்திருக்கிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டுச் சிந்தனையாளர்களான கென்னத் தாமஸ், ரால்ப் கில்மன் ஆகியோர் மோதல்களைத் தவிர்க்கும் முறைகள் பற்றி கூறியுள்ளனர். அவை வருமாறு:-

முரண்பட்டு நிற்பவர்களிடம் திறந்த மனதுடன் நியாயமாக பேசி பார்க்க வேண்டும். விட்டுக்கொடுப்பதன் மூலமாக சமரசம் செய்துகொள்ள வேண்டும். முரண்பாடு கொண்டவர்களிடம் மோதி பார்த்து இறுதி முடிவை எட்ட வேண்டும். இணங்கிப்போய் விடுதல். இணைந்து செயல்படுவதன் மூலம் முரண்பட்டு நிற்பவர்களிடையே பொறுப்புகளைப் பகிர்ந்து கொடுத்து விட வேண்டும். இந்த முடிவுகள் அமெரிக்க அறிஞர்கள் இன்றைய நாட்களில் கூறியுள்ளவை; ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தமிழ் இலக்கியங்களில் இந்த செய்திகள் கூறப்பட்டு இருப்பது மாபெரும் அதிசயமாக தோன்றுகிறது.

திருவள்ளுவர்,

“இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் தவல் இல்லாத்
தாவில் விளக்கம் தரும்”

என்று கூறுவது மோதல்களைத் தவிர்க்கும் முறை பற்றியதாகும் என்பதில் ஐயம் இல்லை. முரண்பாடு தோன்றியிருக்கும் நிலையில் மிக்க கரிசனத்துடன் ஒருவர் பேசுவதே மற்றவரை கேட்க செய்யும். தமிழ் காப்பியமான நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில், சேரன் செங்குட்டுவன் கண்ணகி தெய்வத்திற்கு கோவில் கட்ட வடதிசை மன்னர்களைப் போரில் வென்று கல்லைக் கொணர்கிறான். தோற்ற வடதிசை மன்னர்களை ஏனைய தமிழ் மன்னர்களிடம் காட்டி வருமாறு அனுப்புகிறான்; சேரனின் வீரத்தை பாராட்டாமல் அவர்கள் கேலியாக பேசிய செய்தியை அறிந்த செங்குட்டுவன் கோபம் கொண்டு போர் தொடுக்க நினைக்கிறான். அப்போது மாடல மறையோன் என்னும் அந்தணன் பேசுகிறான்.

“அரசர் ஏறே அமைக நின் சீற்றம்
இகழாது என் சொற் கேட்டால் வேண்டும்”

என்று தொடங்கி இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, உயிரின் நிலையாமை, யாக்கை நிலையாமை போன்றவற்றை கூறி அறச்செயல்கள் செய்வதே நிலைத்த பயன் தரும் என்பதை கூறுகிறான். செங்குட்டுவனின் எண்ணத்தில் மாற்றம் ஏற்படுகிறது. நடைபெறவிருந்த பெரும்போர் தவிர்க்கப்படுகிறது. முறையான கருத்தை கூறவேண்டிய முறையில் கூறினால் மோதல்கள் தவிர்க்கப்படலாம் என்பதற்கு இது நல்ல சான்றாகும். மோதல்களைத் தவிர்ப்பதில் இரண்டாவது முறை, விட்டுக்கொடுத்துச் செல்வதாகும். விட்டுக்கொடுத்து போவதை பற்றி திருவள்ளுவர், “திறன் அல்ல தன் பிறர் செய்யினும் நோநொந்து அறன் அல்ல செய்யாமை நன்று” என்று கூறுகிறார்.

ஒரு சிங்கம், கரடி, நரி மூன்றும் இணைந்து செயல்படுவதென முடிவு செய்து வேட்டைக்கு சென்று ஒரு விலங்கினை அடித்துக்கொண்டு வருகின்றன. விலங்கின் தசையைச் சமமான மூன்று பங்காக கரடி பிரிக்க சிங்கம் கோபம் கொண்டு கரடியை அடித்துக்கொன்றது. பின்னர் நரி பங்கு பிரித்தது. சிங்கத்திற்கு பெரிய பகுதியை ஒதுக்கி தனக்கு சிறிய துண்டினை எடுத்துக்கொண்டது. சிங்கம் மிக மகிழ்ந்து “இப்படி சரியாக பங்கு போட எங்கே கற்றுக்கொண்டாய்?” என்று கேட்க நரி “இப்போதுதான்! கரடிக்கு ஏற்பட்டதை கண்டு பங்கு போடுவது எப்படி என்று கற்றுக்கொண்டேன்” என்று பதில் கூறியது. இந்த கதை தேவைப்படும் சூழலில் விட்டுக்கொடுத்து போவதே சிறப்பு என்பதை கூறுகிறது.

மோதல் தவிர்ப்பதில் மூன்றாவது முறை போட்டியிட்டு வெல்வதாகும். போட்டியில் தன்னால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் இந்த முறையை தேர்வு செய்வார்கள். இதற்கும் பண்டைத்தமிழ் இலக்கியங்களில் பல சான்றுகள் உள்ளன. சோழன் நலங்கிள்ளி என்ற மன்னனுடன் போரிடுவதற்காக பகைவர்கள் வந்தபோது சோழன், “மெதுவாக வந்து என் பாதங்களில் வீழ்ந்து வணங்கினால் இரக்கப்பட்டு என் நாட்டையே கூட வழங்கி விடுவேன்; ஆனால் எனது வலிமையை உணராமல் போருக்கு வந்தவர்கள் தூங்கும் புலியைக் காலால் இடறியவர்கள் அழிவதைப் போல துன்புறுவது உறுதி” என்று கூறுகிறான்.

இதை வஞ்சினம் கூறுதல் என்று இலக்கியங்கள் அழைக்கின்றன. மோதல்களைத் தவிர்ப்பதில் நான்காவது முறை ஒருவரின் நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகும். முரண்பட்ட இருவருக்கு இடையில் சீரான உறவு எப்போதும் இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இந்த அணுகுமுறையைக் கையாள்வார்கள். இந்த அணுகுமுறையில் சிக்கல் தீர்க்கப்படும்போது பிடிவாதமுடையவர்கள் வெற்றி பெறும் நிலை ஏற்படும்.

கம்பராமாயணத்தில் கைகேயி ராமனை காட்டுக்கு போகுமாறு கூறியபோது ராமன் கூறிய பதிலில், “ஏற்றுக்கொள்ளும் அணுகுமுறை” செயல்படுகிறது. ராமன், “மன்னவன் பணியன்றாகில் நும் பணி மறுப்பெனோ” என்று பதில் கூறுவதானது சிக்கல் தீர்க்கும் அணுகுமுறைக்கு தக்க சான்றாகும். இலக்குவன் கோபம் மூண்டு, “கொதிக்கும் மனம் எங்ஙனம் ஆற்றுவேன் ?.... முதல் வானவர்க்கும் வலீஇது ஆம், விதிக்கும் விதி ஆம் என் வில் தொழில் காண்டி” என்று கூறுவது மோதி பார்க்கும் மனநிலையைக் காட்டும் பேச்சு.

ராமனின் பேச்சு மற்றவர் நியாயத்தை ஏற்கும் பேச்சு. மோதல்களைத் தவிர்ப்பதில் ஐந்தாவது முறை இணைந்து பணியாற்றுவதாகும். முரண்பட்டு கொண்டிருக்கும் இரு தரப்பினரிடமும் பேசி சிலவற்றை ஒருவர் பெறவும் மற்றவர் சிலவற்றை பெறவும் வழிவகை செய்தல். இதனால் இரு தரப்பினருக்கும் நன்மையையும், இழப்பும் சமமாக இருக்கும்; அவரவர் பொறுப்புகளைப் பிரித்துக்கொடுத்து பணிகளில் ஈடுபடுத்துதல்; இதனால் இது என் வேலை; இது அவர் வேலை என்ற வேறுபாடு இல்லாமல் அவரவர் பணியைச் செய்ய வழி ஏற்படும். முரண்படுபவரைத் தன்னுடன் இணைத்துக்கொண்டு பணிசெய்ய இது உதவும்.

முனைவர் ம.திருமலை, முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம்.
Tags:    

Similar News