செய்திகள்
ஐகோர்ட் மதுரை கிளை

நாங்குநேரி இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரிய மனு தள்ளுபடி

Published On 2019-10-18 10:44 GMT   |   Update On 2019-10-18 10:44 GMT
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மதுரை:

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
 
இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுக்கவிருந்த ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என தகவல் வெளியானது. பணம் விநியோகித்தவர்களை பொதுமக்களே பிடித்து வைத்துள்ளனர் என்று வெளியான தகவலை தொடர்ந்து பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று விசாரணை நடத்தினர்.

நாங்குநேரி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக சங்கர சுப்பிரமணியன் என்பவர் போட்டியிடுகிறார்.  அவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், நாங்குநேரி தொகுதியில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க முடிவு செய்துள்ளனர். நாங்குநேரி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சிப்பதால் தேர்தலை அக்டோபர் 21-ம் தேதிக்கு பிறகு நடத்த உத்தரவிட வேண்டும். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த மனு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், தேர்தலை நேர்மையாக நடத்த தமிழக அரசு சிறப்பான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், இதுவரை 19 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இருதரப்பு வாதத்தை கேட்டறிந்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு, தேர்தல் அறிவித்த பின் தேர்தல் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. தேர்தலின் போது ஏற்படும் அசாதாரண விஷயங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தால் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்ற நீதிபதிகள், சுயேட்சை வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
Tags:    

Similar News