வழிபாடு
மகா தீபம் ஏற்றப்பட்டதையும், பக்தர்கள் தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம்.

2 ஆண்டுக்கு பிறகு திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது

Published On 2022-03-19 05:33 GMT   |   Update On 2022-03-19 05:33 GMT
2 ஆண்டுக்கு பிறகு திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் பங்குனி மாத பவுர்ணமி மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திண்டிவனம் அருகே திருவக்கரையில் பிரசித்தி பெற்ற வக்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி அன்று மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டாக கோவிலில் மகா தீபம் ஏற்றவில்லை. ஆனால் கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வந்தது.

தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் மகா தீபம் ஏற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி பங்குனி மாதத்திற்கான பவுர்ணமி மகா தீபம் நேற்று முன்தினம் இரவு ஏற்றப்பட்டது.

இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, வக்ரகாளியம்மனுக்கு பால், இளநீர் உள்ளிட்ட பலவிதமான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் வக்ரகாளியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

நள்ளிரவு 12 மணிக்கு கோவிலின் மேல் பிரகாரத்தில் அமைந்துள்ள பீடத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் காளி, வக்ர காளி, ஜோதி, ஜோதி, வக்ரகாளி ஜோதி, ஜோதியை பார்த்தால் பாவம் தீரும் என கோஷமிட்டு, வக்ரகாளியம்மனை வழிபட்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, செயல் அலுவலர் சிவக்குமார், ஆய்வாளர் உமா சிவாச்சாரியார், குருக்கள் சேகர், மேலாளர் ரவி ஆகியோர் செய்திருந்தனர். மகா தீபத்தையொட்டி விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
Tags:    

Similar News