செய்திகள்
கோப்புபடம்

300 ஆண்டு பழமையான நடுகல்லை வழிபடும் பொதுமக்கள்

Published On 2021-10-18 06:37 GMT   |   Update On 2021-10-18 06:37 GMT
மாவீரனின் அள்ளி முடித்த குடுமி, இடப்புறம் சாய்ந்துள்ளது. அவனுக்கு அருகில், வணங்கியபடி ஒரு பெண் காணப்படுகிறாள்.
அவிநாசி:

நீர்நிலைகளை பாதுகாக்கும் பணியில் அந்த ஊரைச் சேர்ந்த வீரம் செறிந்த இளைஞர்கள் ஈடுபடுவர். அதில் மரணம் அடைவதும் உண்டு. ஊரின் நலனுக்காக வீர, தீர செயல் செய்தவர்களின் நினைவாக ஊரின் மையப்பகுதி, கோவில் உள்ளிட்ட இடங்களில் நடுகல் வைப்பது வழக்கம்.

இந்த கல், வெறும் காட்சிப்பொருள் அல்ல, வீரத்தின் சின்னம் என்பதை வரலாற்று ஆய்வுகள் மூலம் மக்கள் அறிந்தும், உணர்ந்தும் வருகின்றனர். அவ்வகையில் வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய பொறியாளர் ரவிகுமார், பொன்னுசாமி, டாக்டர் ரமேஷ்குமார் ஆகியோர் 2014ல் அவிநாசி அருகே சின்னகானூர் குளக்கரையில் ஒரு நடுகல்லை கண்டறிந்தனர்.

செயற்கறிய செயல் செய்த மாவீரனுக்கு நடுகல் வைத்து நம் முன்னோர் வழிப்பட்டு வந்தனர். நாமும் இந்த நடுகல்லை வழிபட்டால், வலிமை பெருகும் என அங்கிருந்த மக்களிடம் அவர்கள் கூற அப்பகுதி மக்கள் நடுகல்லை சுற்றி சிறிய மேடை அமைத்து வழிபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ரவிக்குமார் கூறுகையில்:

இந்த நடுகல், 75 செ.மீ., உயரம். 30 செ.மீ.. அகலம் கொண்டது. இந்த வீர நடுகல்லில் உள்ள மாவீரன்  தன் வலக்கையில் குறுவாள், இடக்கையில் கேடயம் வைத்துள்ளார். கழுத்தில் அணிகலன்களும் இடையில் மட்டும் ஆடை அணிந்துள்ளார். 

இம்மாவீரனின் அள்ளி முடித்த குடுமி, இடப்புறம் சாய்ந்துள்ளது. அவனுக்கு அருகில், வணங்கியபடி ஒரு பெண் காணப்படுகிறாள். இது 300 ஆண்டு பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என்றனர்.
Tags:    

Similar News