செய்திகள்
ஒருநபர் விசாரணை கமி‌ஷனிடம் வக்கீல் வாஞ்சிநாதன் ஆஜராக வந்த காட்சி.

ரஜினிக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும்- நெல்லை வக்கீல் வற்புறுத்தல்

Published On 2019-07-18 05:27 GMT   |   Update On 2019-07-18 05:27 GMT
துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும் என்று நெல்லை வக்கீல் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி காவல்துறை நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 14 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமி‌ஷன் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாக கூறினார்.

இந்த நிலையில் நீதிபதி ஜெகதீசனின் 13-வது கட்ட விசாரணை நேற்று முன்தினம் தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகையில் தொடங்கியது.

இதில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு கழகத் தலைவர் வக்கீல் வாஞ்சிநாதன் நேற்று நீதிபதி அருணா ஜெகதீசன் முன்பு ஆஜரானார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் தேவையற்ற ஒன்று. காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஸ்டெர்லைட் நிறுவனம் இணைந்து இந்தத் துப்பாக்கி சூடு நடத்தியதில் அப்பாவி மக்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக உரிய ஆவணங்கள் விசாரணை ஆணையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் வேதாந்தா நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். அவர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களை குறித்து கருத்து தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைப்போல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் நடைபெற்று வரும் விசாரணை ஆணையத்தின் 13-ம் கட்ட விசாரணையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் மகேஷ் குமார், ராஜேஷ் குமார், ரவிக்குமார், செல்வராஜ் ஆகியோர் ஆணையத்தின் முன்பு ஆஜரானார்கள். கலவரத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆணையத்தின் முன்பு சமர்ப்பிக்க போவதாக அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News