செய்திகள்
சுபஸ்ரீக்கு அஞ்சலி செலுத்திய போது எடுத்த படம்.

ஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன?

Published On 2019-09-14 08:37 GMT   |   Update On 2019-09-14 08:37 GMT
பேனர் குறுக்கே விழுந்ததால் நிலை தடுமாறி விழுந்து, பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் ஆன்மா சாந்தியடைய இனி நாம் என்ன செய்யலாம்? என்பதை இங்கே பார்ப்போம்.
சென்னை:

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ரவி-கீதா தம்பதியரின் மகள் சுபஸ்ரீ(23). பொறியியல் பட்டதாரியான இவர் பெருங்குடியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இருசக்கர வாகனத்தில் அலுவலகத்துக்குச் சென்றுவருவதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த வியாழக்கிழமை பிற்பகல் வழக்கம்போல் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

பள்ளிக்கரணை வழியாகச் சென்றபோது சாலையின் நடுவே அ.தி.மு.க நிர்வாகி இல்ல திருமண விழாவுக்கான பேனர்கள் மற்றும் கொடிகளும் வைக்கப்பட்டிருந்தன.

வாகனங்கள் அதிவிரைவாக செல்லும் பள்ளிக்கரணை ரேடியல் சாலையின் நடுவில் விளக்கு கம்பத்தில் கட்டப்பட்டிருந்த பேனர்களில் ஒன்று திடீரென்று அறுந்து விழுந்ததில் நிலைகுலைந்து விழுந்த சுபஸ்ரீ, பின்னால் வேகமாக வந்த தண்ணீர் டேங்கர் லாரியில் சிக்கி உயிரிழந்தார். பேனர் சரிந்து விழுந்ததால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 
சுபஸ்ரீயின் உடலை மீட்டு, இந்த வழக்கை யார் விசாரிப்பது? என பரங்கிமலை போக்குவரத்து போலீசாருக்கும், பள்ளிக்கரணை சட்டம்-ஒழுங்கு போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் சுபஸ்ரீயின் உடல் நீண்டநேரமாக சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தது.
 
சுமார் 2 மணிநேரத்துக்கு பிறகு பரங்கிமலை போக்குவரத்து போலீசார், பொதுமக்கள் உதவியுடன் சுபஸ்ரீயின் உடலை மீட்டு, போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலையின் எதிர்புறமாக தூக்கிச்சென்று மினிலோடு வேனில் ஏற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்த பகுதியில் போலீசார் சார்பில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், அது இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை என தெரிகிறது.

ஆனால் அருகில் உள்ள கார் உதிரிப்பாகங்கள் விற்பனை கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில், சாலையின் நடுவில் கட்டி இருந்த ‘பேனர்’ காற்றில் பறந்து சென்று ஸ்கூட்டரில் செல்லும் சுபஸ்ரீ மீது விழுவதும், இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த அவர் மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

அத்துடன் பலியான சுபஸ்ரீயின் உடல் ஆம்புலன்சில் ஏற்றாமல் சரக்கு வேனில் ஏற்றிச்செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. நேற்று அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவியது.


ஆம்புலன்ஸ் இன்றி லோடு வேனில் அவரது உடலை ஏற்றிச்சென்ற கொடூர காட்சியை பார்த்தவர்களின் நெஞ்சத்தை பதைபதைக்க வைத்தது.

இதற்கிடையில், இவ்விவகாரம் தொடர்பாக தனது கடுமையான கண்டனத்தை தமிழ்நாடு அரசுக்கும் போலீசாருக்கும் தெரிவித்த சென்னை ஐகோர்ட் சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை நேற்று பிற்பகலுக்கு ஒத்திவைத்தது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஐகோர்ட்டில் ஆஜராகினர். அதிகாரிகளை சரமாரியான கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தனர் நீதிபதிகள், பேனர் விழுந்து இளம்பெண் பலியான விவகாரத்தில் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

பேனர் விவகாரத்தில் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொண்டது வெளிப்படையாக தெரிகிறது. தலைமைச் செயலரோ, நகராட்சி நிர்வாக செயலரோ பதில் மனுவில் கூறியது போல் செயல்படவில்லை.

அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து அறிக்கை தேவை. பணியில் கவனக்குறைவு போன்றவை குறித்து அறிக்கை  தாக்கல் செய்ய வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேலும், உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அரசு வசூலிக்க வேண்டும். இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தொடர்ந்து கண்காணிக்கும் என தெரிவித்துள்ளது.

இத்தனை பரபரப்புகளுக்கு இடையில் சாலை விபத்தில் இறந்த சுபஸ்ரீ மற்றும் அவரது பெற்றோரின் எதிர்கால கனவு சுமார் 24 மணி நேரத்துக்குள் ‘பிடிசாம்பலாக’ மாறிப்போனது. நேற்றுவரை #RIPSubhasree என்ற குறியீட்டுடன் சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக் ஆக உலாவந்த சுபஸ்ரீயின் ஆன்மா சாந்தியடைய அனைத்து தரப்பினரும் பிரார்த்தித்தனர்.

கனடா நாட்டுக்கு சென்று ‘எம்.எஸ்.’ உயர்கல்வி பயில திட்டமிட்டு, அதற்கான தேர்வையும் எழுதி, இன்னும் இரு மாதங்களில் வெளிநாட்டு பயணத்துக்காக காத்திருந்த சுபஸ்ரீயின் உயிரை பேனர் வடிவில் வந்த காலன் பறித்து, சாவூருக்கு அழைத்துச் சென்று விட்டான். குரோம்பேட்டை எரிவாயு தகனமேடையில் அவர் ‘பிடிசாம்பலாக’, ‘பஸ்பமாக’ ஆகி விட்டார்.

எந்த தவறும், எந்த பாவமும் செய்யாமல் இப்படி வாழ வேண்டிய வயதில் அகால மரணம் அடைந்த சுபஸ்ரீயின் உயிருக்கான விலை என்ன? ஒரே மகளை இழந்து வாடும் ரவி-கீதா தம்பதியரின் எதிர்கால நிம்மதி, ஆறுதல் மற்றும் நல்வாழ்வுக்கு நாம் அளிக்கப் போகும் இழப்பீடு என்ன?

சென்னை ஐகோர்ட் உத்தரவிட்ட வெறும் 5 லட்சம் ரூபாய் இடைக்கால நிவாரணம் மட்டுமா? இல்லை, இது போதாது என தீர்மானிப்பவர்கள் இனி தங்கள் பங்குக்கு சுபஸ்ரீயின் மரணத்துக்கு பரிகாரம் தேட நிச்சயமாக முன்வர வேண்டும்.

தமிழகம் முழுவதும் பேனர் கலாச்சாரத்தை கடுமையாக எதிர்ப்போம். அனுமதி பெற்றோ, அனுமதியின்றியோ முளைக்கும் பேனர்களை எல்லாம் தன்னார்வலர்களாக நின்று அகற்ற நடவடிக்கை எடுத்து ஆவனச் செய்வோம் என நாம் அனைவரும் திடமாக உறுதியேற்போம்!

‘பேனர் கலாச்சாரத்தை அறவே ஒழிப்போம் - அதையும் அறவழியில் செய்து முடிப்போம்’ என்னும் ஒரே அறைகூவல் மட்டும்தான் சுபஸ்ரீயின் உயிருக்கு நாம் அளிக்கும் உன்னதமான விலையாக அமைய முடியும்!!
Tags:    

Similar News