ஆன்மிகம்
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் கணக்க விநாயகரை தரிசிக்க வரிசையில் நின்ற பக்தர்கள்.

கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் இன்று பிரகதீஸ்வரருக்கு 60 கிலோ சாதத்தால் அன்னக்காப்பு அலங்காரம்

Published On 2021-10-20 05:55 GMT   |   Update On 2021-10-20 05:55 GMT
அன்னாபிஷேகத்திற்காக கங்கைகொண்ட சோழபுரம் கோவில் பிரகதீஸ்வரருக்கு வழக்கமாக நடைபெறும் 2,500 கிலோ அரிசி இந்த ஆண்டு 60 கிலோவாக குறைக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது கங்கை கொண்டசோழபுரம். தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழன் தனது ஆட்சிக்காலத்தில் ஆயிரம் வருடத்திற்கு முன் கங்கை வரை படையெடுத்து சென்று வடபுறத்து மன்னர்களை வெற்றிக்கொண்டதன் அடையாளமாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற புதிய நகரை உருவாக்கி அங்கு பிரகதீஸ்வரர் கோவிலை கட்டினார்.

இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 13½ அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்ட சிவலிங்கம் தான் உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் என போற்றி வணங்கப்படுகிறது. கங்கை கொண்டசோழபுரம் பிரகன் நாயகி உடனுறை பிரகதீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.

அன்றைய தினத்தில் 100 சிப்பம் மூட்டை கொண்ட 2,500 கிலோ பச்சரிசியைக் கொண்டு கோவில் வளாகத்தில் சமைத்து, பிரகதீஸ்வரருக்கு சாத்தப்பட்டு 50 வகையான பழங்கள், வில்வ இலை உட்பட 11 வகை இலைகள், 21 வகை பூக்களால் அலங்கரித்து. (சந்திரோதய காலத்தில்) மாலை 6 மணியளவில் மகா தீபாராதனை நடந்தப்படும்.

அதன்படி ஐப்பசி பவுர்ணமியான இன்று 37-வது ஆண்டு அன்னாபிஷேக விழாவையொட்டி கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் இன்று காலை கணக்க விநாயகருக்கு முதல் அபிஷேகம் நடைபெற்றது. கங்கை நீர், மஞ்சள், சந்தனம், இளநீர், பன்னீர், தேன் உள்பட 21 வகையான பொருட்களால் இந்த அபிஷேகம் நடந்தது. பின்னர் ருத்ரஹோமம், பிரகதீஸ்வரர், அம்பாள், மகிஷாசுரமர்த்தினி, சுப்ரமணியர் மற்றும் நவக்கிரகங்களுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

தற்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் இருப்பதால் அன்னாபிஷேக விழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் தான் அனுமதியும் வழங்கப்பட்டது. வழக்கமாக நடைபெறும் 2,500 கிலோ அரிசி இந்த ஆண்டு வெறும் 60 கிலோவாக குறைக்கப்பட்டுள்ளது.

அதுவும் கோவிலுக்கு வெளியில் சாதம் தயார் செய்யப்பட்டு மதியம் கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த சாதம் பிரகதீஸ்வரரின் முன்பக்கம் மற்றும் சாற்றப்பட்டு அன்னக்காப்பு அலங்காரத்தில் மாலை 6 மணிக்கு மகா தீபாராதனையும், பின்னர் ஐந்தடுக்கு தீபா ராதனையும் நடக்கிறது.

ஐப்பசி பவுர்ணமி அன்று சிவ ஸ்தலத்திற்கு சென்று வழிபடுவது (பாவ விமோசனம்) புண்ணியம், அதைவிட சிவலிங்கத்திற்கு அன்னம் சாத்தப்பட்டு ஒவ்வொரு சாதத்து பருக்கையும் சிவ அம்சம் பெற்று, சிவஸ்வரூபமாக மாறுவதால் அன்று அன்னாபிஷேகத்தை தரிசிப்பது, கைலாயம் சென்று தரிசிப்பதற்கு ஈடானதாகும் என ஐதீகம்.

கோடி சிவஸ்தலத்திற்கு சென்று தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவர். தொடர்ந்து இரவு 9 மணியளவில் அன்னாபிஷேக சாதத்தை பக்தர்களுக்கு விநியோகித்துவிட்டு, சகல ஜீவராசிகளுக்கும் சிவ அருள் கிடைக்கவும், ஏரி மற்றும் குளங்களிலும், பூமிக்குள் இருக்கும் உயிரினங்களுக்காக, குழி தோண்டி புதைக்கப்பட்டும், பூமியில் வாழும் மிருகங்கள், பறவைகள், கரையான்கள் உட்பட உயிரினங்களுக்கு வயல் வெளிகளில் மற்றும் திறந்த வெளியில் இரைத்தும் அன்னாபிஷேக சாதம் விநியோகிக்கப்படும்.

தொடர்ந்து நாளை பிரகதீஸ்வரருக்கு ருத்ராபிஷேகம் நடைபெற உள்ளது. அன்னாபிஷேகத்தை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறை மற்றும் காஞ்சி சங்கர மட அன்னாபிஷேக விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News