செய்திகள்
கோப்புப்படம்

கொச்சியில் தனியார் விமானம் ஜப்தி

Published On 2019-10-11 07:40 GMT   |   Update On 2019-10-11 07:40 GMT
கேரள மாநிலம் கொச்சியில் வங்கி கடனை செலுத்தாததால் தனியார் விமானம் ஜப்தி செய்யப்பட்டது.
கொச்சி:

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த விமானிகள் சூரன் ஜோஸ், சுதீஷ் ஜார்ஜ் ஆகியோர் கடந்த 2014-ம் ஆண்டு ஒரு வங்கியில் ரூ.4.20 கோடி கடன் பெற்று அத்தொகையில் அமெரிக்காவில் இருந்து 2 கடல் விமானங்களை இறக்குமதி செய்தனர்.

அதை கேரள அரசின் பொதுமக்கள், தனியார் பங்களிப்பு திட்டத்தின் கீழ் ‘சீ பேர்டு’ என்ற தனியார் விமான போக்குவரத்தை தொடங்கினர்.

ஆனால் இந்தியாவில் பறப்பதற்கு உரிய உரிமம் பெறாததால் அந்த நிறுவனம் உள்நாட்டில் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. ஒரே ஒரு முறை மட்டும் இலங்கை சென்று வந்த விமானங்கள் கடந்த 2 ஆண்டுகளாக கொச்சி சர்வதேச விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால் விமானங்களை பராமரிக்கும் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய தொகை, வங்கி கடன் ஆகியவற்றை செலுத்த முடியவில்லை. கடனை செலுத்தாததால் விமானம் ஜப்தி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும்போது, “சர்பாசி சட்டம் 2002-ன் கீழ் கடந்த 3 ஆண்டுகளாக வங்கிகடனை செலுத்தாததால் தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தின் உத்தரவுபடி கடல் விமானம் பறிமுதல் செய்யப்பட்டது” என்றார்.

தனியார் நிறுவனத்தின் விமானம் ஜப்தி செய்யப்படுவது நாட்டில் இதுவே முதல் முறையாகும்.
Tags:    

Similar News