செய்திகள்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு - தலைமை தேர்தல் ஆணையரிடம் எதிர்க்கட்சிகள் முறையீடு

Published On 2019-02-01 13:20 GMT   |   Update On 2019-02-01 13:20 GMT
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக குற்றம்சாட்டும் எதிர்க்கட்சி தலைவர்கள் 4-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் அளிக்கின்றனர். #Oppositionleaders #electioncommission #EVMtampering
புதுடெல்லி:

இந்தியாவில் தேர்தல்களின்போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து ஒருவர் காணொலி மூலம் செய்தியாளர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார்.

இவ்விவகாரம் தற்போது இந்திய அரசியலில் சூடுபிடித்துள்ளது. இனிவரும் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக பழையபடி வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

உலகில் உள்ள இரண்டு மூன்று நாடுகளில்தான் மின்னணு வாக்குப்பதிவு முறை நடைமுறையில் உள்ளது. இதர நாடுகள் எல்லாம் வாக்குச்சீட்டு முறைக்கு மாறிவிட்டன என எதிர்க்கட்சி தலைவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆனால்,  மின்னணு வாக்குப்பதிவு முறையில் மாற்றம் செய்ய முடியாது என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக டெல்லியில் உள்ள அரசியலமைப்பு மன்றத்தில் இன்று மாலை எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சி சார்பில் ராம் கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சதிஷ் சந்திரா மிஷ்ரா, தி.மு.க. சார்பில் கனிமொழி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் டெரெக் ஓ ப்ரியென், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.கே.ரங்கராஜன், ராஷ்டரிய ஜனதா தளம் சார்பில் மனோஜ் ஜா, ஆம் ஆத்மி சார்பில் சஞ்சய் சிங்,  ராஷ்டரிய லோக் தள் சார்பில் ஜெயந்த் சவுத்ரி உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது என்ற குற்றச்சாட்டை பதிவு செய்யும் வகையில் தலைமை தேர்தல் ஆணையரை வரும் திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு நாங்கள் (எதிர்க்கட்சி தலைவர்கள்) சந்திப்போம்’ என்று தெரிவித்துள்ளார். #Oppositionleaders #electioncommission #EVMtampering
Tags:    

Similar News