வழிபாடு
ஆலத்தூர் காருடைய அய்யனார்-வீரனார் கோவில் கும்பாபிஷேகம்

ஆலத்தூர் காருடைய அய்யனார்-வீரனார் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-02-12 05:26 GMT   |   Update On 2022-02-12 05:26 GMT
ஆலத்தூர் காருடைய அய்யனார்-வீரனார் கோவில் குடமுழுக்கு விழா நடந்தது. இந்த குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த காருடைய அய்யனார் கோவில், வீரனார் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் கடந்த 1979-ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.

43 ஆண்டுகளுக்கு பிறகு ஆலத்தூர் கிராம மக்களின் பெரு முயற்சியாலும், வெளிநாடு வாழ் கிராமவாசிகளின் உதவியாலும் ரூ.3 கோடி செலவில் ஆகம முறைப்படி பூரணம்பாள், புஷ்கலாம்பாள் சமேத அய்யனார்-வீரனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணி வேலைகள் நடைபெற்றது.

திருப்பணிகள் முடிந்ததையொட்டி குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து குடமுழுக்கு விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. கடந்த 6 மற்றும் 7-ந் தேதிகளில் விநாயகர் வழிபாடும், வாஸ்து சாந்தியும் நடந்தது. 8-ந் தேதி நடந்த முதல் கால யாகசாலை பூஜையை பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் தொடங்கி வைத்தார்.

9-ந் தேதி காலை 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜையும், 10-ந் தேதி 4-ம் கால யாகசாலை பூஜையும், 5-ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது.

நேற்று காலை 6 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடந்தது. தொடர்ந்து காலை 8.30 மணிக்கு யாத்ரா தானம் கடம் புறப்பாடு நடந்தது.

தொடர்ந்து காலை 10.14 மணிக்கு காருடைய அய்யனார்-வீரனார் குடமுழுக்கும், மூலஸ்தானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கும் நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மழையில் நனைந்தவாறே கும்பத்தை நோக்கி வணங்கினர். பின்னர் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் சிறப்பு மருத்துவ முகாம், கொரோனா தடுப்பூசி முகாம்களும் நடைபெற்றன. இதில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வீ.பாரதிதாசன், முன்னாள் எம்.எல்.ஏ. சி.வி.சேகர் மற்றும் அரசு அதிகாரிகள், வக்கீல்கள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், பாப்பாநாடு, ஒரத்தநாடு பகுதிகளை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
Tags:    

Similar News