உள்ளூர் செய்திகள்
அலங்காநல்லூர் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது

அலங்காநல்லூரில் வெல்லம் தயாரிப்பு மும்முரம்

Published On 2022-01-05 11:35 GMT   |   Update On 2022-01-05 11:35 GMT
பொங்கல் பண்டிகைக்காக அலங்காநல்லூர் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது
அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் செம்புகுடிப்பட்டி, அய்யனகவுண்டன்பட்டி, வலசை, கொண்டையம்பட்டி, கல்லணை, சம்பக்குளம் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் ஆலை கரும்புகளை சாகுபடி செய்து வருகின்றனர். 

இந்த கரும்பு 10 மாதத்திற்கு பிறகு கடந்த சில வாரங்களாக கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு தை பொங்களுக்காக விவசாயிகள் வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். தை பொங்கல் என்றாலே வீடுகள் தோறும் பொங்கல் வைத்து சுவாமிக்கு படைத்து வழிபடுவது வழக்கம். இனிப்பு வெல்லம் பொங்கல் வைக்க பயன்படும் முக்கிய பொருளாகும். 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணிகள் இருந்து வந்தாலும் அலங்காநல்லூர் பகுதியில் தயார் செய்யப்படும் வெல்லத்திற்கு தனிமதிப்பு உண்டு. இதுகுறித்து விவசாயி செம்புகுடிபட்டியை சேர்ந்த ஆலை தொழிலாளி அர்ஜு னன் கூறியதாவது:-

40 ஆண்டுகளுக்கு மேலாக கரும்பு ஆலையில் வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். ஒரு நாளைக்கு 4 முதல் 5 கொப்பரை வரை வெல்லம் தயாரிப்போம். ஒரு கிலோ ரூ.45 முதல் 50 ரூபாய் வரை மொத்த விலைக்கு போகிறது. 

10 கிலோ கொண்ட ஒரு மணு ரூ.350 முதல் 500 வரை விலை போகிறது. ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு பயிரிட்டால் 50 கொப்பரை வரை வெல்லம் தயாரிக்கலாம். ஒரு கொப்பரை மூலம் சுமார் 80 முதல் 85 கிலோ வரை வெல்லம் கிடைக்கும். வெல்லம் தயாரிக்கும் பணிக்கு சுமார் 6 பேர் வரை தேவைப்படுகிறது. 

ஒரு ஏக்கர் கரும்பு பயிரிட உழுவது, பார் போடுவது, தோகை உரிப்பது 2 முறை உரம் வைப்பது உள்ளிட்ட பராமரிப்பு செலவு மட்டும் ரூ.55ஆயிரம் முதல் 60ஆயிரம் வரை ஆகிறது. கரும்பு வெட்டு கூலி, ஆலை ஆட்டு கூலி செலவு போக ஒரு ஏக்கருக்கு சுமார் 40ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். கரும்பு நடவிலிருந்து ஆலை அரவைக்கு கரும்பு தயாராக சுமார் 10 மாதங்கள் வரை ஆகிறது. 

ஆலை கரும்பு அறுவடை செய்து அதை வெல்லமாக காய்ச்சி பக்குவப்படுத்தப்பட்டு மண்டை வெல்லமாக தயாரித்து மொத்த வியாபாரத்திற்கு மதுரைக்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பப் படுகிறது. சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் இந்த மண்டை வெல்லத்தை சர்க்கரை நோய் உள்ளவர்கள் கூட சாப்பிடலாம். 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெல்லம் தயாரிக்கப்பட்டாலும் பிற மாநிலங்களில், அலங்கா நல்லூர் பகுதியில் தயாரிக்கப்படும் வெல்லத்திற்கு தனி மவுசு தான். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News