செய்திகள்
மரணம்

அரியலூர் அருகே மழையால் வீடு இடிந்து விவசாயி பலி

Published On 2019-09-13 08:09 GMT   |   Update On 2019-09-13 08:09 GMT
அரியலூர் மாவட்டம வெங்கனூர் விளாகத்தில் மழையால் வீடு இடிந்ததில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் வெங்கனூர் விளாகம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 41), விவசாயி. இவரது மனைவி கோமதி (39). இவர்களுக்கு ஜெயபிரகாஷ் (17) என்ற மகனும், ஜெயமாலினி (15) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் பழமையான கான்கிரீட் வீட்டில் வசித்து வந்தனர்.

நேற்று முன்தினம் அப்பகுதியில் பெய்த மழை காரணமாக அவரது வீட்டில் மழைநீர் ஒழுகியது. இதனால் வீடு இடியும் நிலையில் இருந்தது. இதனால் ஜெயசீலனிடம் அவரது உறவினர்கள், இரவு வீட்டில் தங்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். இதையடுத்து கோமதி, ஜெயபிரகாஷ், ஜெயமாலினி ஆகியோர் நேற்றிரவு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தூங்கினர். ஜெயசீலன் மட்டும் அங்கு செல்லாமல் அவரது வீட்டில் தூங்கினார்.

இந்தநிலையில் இரவு திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் எழுந்து சென்று பார்த்தனர். அப்போது இடிபாடுகளுக்கிடையே சிக்கிய ஜெயசீலன் மூச்சுத் திணறி இறந்து கிடந்தார்.

இது குறித்து வெங்கனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயசீலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயசீலனின் உடலை பார்த்து அவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் கதறி அழுதது பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News