செய்திகள்
தடுப்பூசி

மாநில அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கோவை 2-வது இடம்

Published On 2021-11-26 10:09 GMT   |   Update On 2021-11-26 10:09 GMT
தமிழகத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் முதல் தவணை தடுப்பூசியை 100 சதவீதம் பேரும். இரண்டாவது தவணை தடுப்பூசியை 45 சதவீதம் பேரும் செலுத்தி உள்ளனர்.
கோவை:

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பினை கட்டுப்படுத்த மத்திய அரசு சார்பில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. ஆரம்பத்தில் டாக்டர்கள், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து, பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடந்தன.

தற்போது, 18 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் தடுப்பூசி போடும் பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகிறது. தற்போது, வாரத்திற்கு இரண்டு முறை மெகா தடுப்பூசி முகாம் நடத்தி பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

100 சதவீதம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், தடுப்பூசி தொடர்பான பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், சமீபகாலமாக தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் முதல் தவணை தடுப்பூசியை 100 சதவீதம் பேரும். இரண்டாவது தவணை தடுப்பூசியை 45 சதவீதம் பேரும் செலுத்தி உள்ளனர். இதையடுத்து. கோவை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 91 சதவீதம் பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 55 சதவீதம் பேரும் செலுத்தியுள்ளனர்.

கோவையில் முதல் தவணை தடுப்பூசியை கடந்த 23-ந்தேதி வரை 25 லட்சத்து 34 ஆயிரத்து 126 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 15 லட்சத்து 33 ஆயிரத்து 452 பேரும் செலுத்தியுள்ளனர். இதனால், மாநில அளவில் கோவை மாவட்டம் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் திருப்பூர் மாவட்டம் 5-வது இடமும், நீலகிரி மாவட்டம் 6-வது இடமும், ஈரோடு மாவட்டம் 15-வது இடத்தையும் பிடித்துள்ளது.
Tags:    

Similar News