வழிபாடு
உறையூர் கமலவல்லி நாச்சியார்

உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நாளை பக்தர்கள் இன்றி நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு

Published On 2022-01-27 05:43 GMT   |   Update On 2022-01-27 05:43 GMT
திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.
108 வைணவ திருத்தலங்களில் இரண்டாவது திவ்ய தேசமாக கருதப்படுவது திருச்சி உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் கோவிலாகும்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலாக கமலவல்லி நாச்சியார் கோவில் உள்ளது. இங்கு கமலவல்லி நாச்சியார், அழகியமணவாள பெருமாள் ஆகியோர் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். மேலும் இக்கோவில் மங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசமாகும்.

மேலும் திருப்பானாழ்வார் அவதரித்த திருத்தலமாகும். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் பரமபதவாசல் திறப்பது போன்ற அனைத்து உற்சவங்களும் இக்கோவிலில் உள்ள தாயாருக்கும் நடைபெறுகிறது.

திருஅத்யயன உற்சவம் எனப்படும் பகல் பத்து கடந்த 23-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த பகல் பத்து உற்சவம் இன்றுடன் (வியாழக்கிழமை) முடிகிறது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் என்னும் சொர்க்கவாசல் திறப்பு நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அதையொட்டி, பகலில் ஆகம விதிப்படி பூஜைகள், ஆராதனை நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று இரவு முதல் ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது. மாலை 6.30 மணி முதல் இரவு 8.45 மணிவரை ஹிரண்யவதம், அரையர் தீர்த்தம், சடகோபம் சாதித்தல் நடக்கிறது.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் வாரந்தோறும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, நாளையை தினம் மாலை கமலவல்லி நாச்சியார் கோவிலில் நடக்கும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியிலும் பக்தர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் வருகிற பிப்ரவரி 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று திருவிழாவின் நிறைவு நாளன்று தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் நடைபெறும்.

இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
Tags:    

Similar News