செய்திகள்
கோப்புபடம்

கொரோனா தடுப்பூசி, சிகிச்சை-ஆசிரியர்கள், களப்பணியாளர்கள், ஆஸ்பத்திரிகளுக்கு அதிரடி உத்தரவு

Published On 2021-11-28 08:28 GMT   |   Update On 2021-11-28 08:28 GMT
கொரோனா தடுப்பூசி போடாமலேயே ஊசி போட்டதாக முறைகேடாக சான்றிதழ் பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.
திருப்பூர்:

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. இதனை தீவிரப்படுத்தும் விதமாக தடுப்பூசி செலுத்தி கொண்ட ஆசிரியர்கள், கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் விபரத்தை பள்ளி  கல்வித்துறையின் இணையதளத்தில் பதிவிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதன்கீழ் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் விபரங்கள் தனித்தனியாக சேகரிக்கப்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்ட அரசு பள்ளிகளில் மட்டும் 7ஆயிரத்து 692 ஆசிரியர்கள் உள்ளனர்.

இதில் 5 ஆயிரத்து 45 பேர் மட்டுமே இரண்டு தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். மேலும் 7ஆயிரத்து 500 பேர் (97 சதவீதம்) முதல் தடுப்பூசி மட்டும் செலுத்தி கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 35 சதவீத ஆசிரியர் இன்னும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்தி கொள்ளவில்லை. அவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் நாடு முழுவதும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் சிலர் கொரோனா தடுப்பூசி போடாமலேயே ஊசி போட்டதாக முறைகேடாக சான்றிதழ் பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.

இதற்கு கள பணியாளர்கள் உடந்தையாக  இருந்ததாக கூறப்படுகிறது. தடுப்பூசி செலுத்தாமலேயே  சான்றிதழ் பெறுவோரால் குழப்பம் ஏற்படுவதால் அதை தடுக்க வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம்  சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தடுப்பூசியை சிலர் தவறாக பயன்படுத்துவதாக  தகவல்கள் வருகின்றன. ஆதார் எண்ணை பகிர்ந்து விட்டு தடுப்பூசி போட்டு கொள்ளாமல்  தடுப்பூசி போட்டதை  போல சான்றிதழ்  பெறுவது   சுகாதாரத்துறை கவனத்திற்கு வந்துள்ளது.

இவ்வாறு முறைகேட்டில் ஈடுபடுவது தவறு. இச்செயலுக்கு  களப்பணியாளர் உதவுவது தெரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே, சான்றிதழ் கிடைப்பதை பணியில் இருப்பவர் கவனத்துடன் உறுதி செய்ய வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இணைநோய் இல்லாமல் கொரோனாவால் இறந்தவர், அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தனி பதிவேடு பராமரிக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கொரோனா தொற்று பாதித்து ஒருவர் அனுமதியாகும் போதே அவரது வயதை கருத்தில் கொண்டு இணைநோய் உள்ளதா என முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தேவையிருப்பின் கொரோனா சிகிச்சையுடன், கூடுதல் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

சில நேரங்களில் இணைநோய் இல்லாதவரும், வயது குறைவானவரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறக்கின்றனர்.அவ்வாறு இறந்தால் எவ்வளவு நாட்களுக்கு முன் தொற்று பாதிப்புக்கு ஆளாகினர். எத்தனை நாட்கள் சிகிச்சையில் இருந்தார்.

இணைநோய் இல்லையெனில், வேறு என்ன காரணத்தால் இறப்பை தழுவினர் என்பது குறித்து விபரம் சேகரித்து, ஒவ்வொரு தலைமை மருத்துவமனையிலும் தனி பதிவேடு பராமரிக்க வேண்டும் என  சுகாதாரத்துறை இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.
Tags:    

Similar News