ஆன்மிகம்
கிருஷ்ணன்

கிருஷ்ணருக்கு ஏன் துளசி மாலை மிகவும் பிடிக்கும்?

Published On 2020-10-08 08:09 GMT   |   Update On 2020-10-08 08:09 GMT
கிருஷ்ணருக்கு எத்தனை மாலை அணிவித்தாலும் துளசி மாலை என்பது ஒரு தனிச்சிறப்பு கொண்டது. ஏன் துளசிக்கு இப்படி ஓர் தனிச்சிறப்பு. அதை மட்டும் ஏன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அதிகம் விரும்புகிறார் தெரியுமா?
விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு. கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன். ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனம் ஆடியவன். குளிர்ந்த மேனியன். எனவே தான், கண்ணன் துளசிமாலை அணிந்து கொள்வான். வீடுகளின் பின்பக்கத்தில் துளசிமாடம் அமைப்பதும் இதனால் தான்.

கிருஷ்ணருக்கு துளசி மாலை அணிவிப்பதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு.

திருமால் தன் மனைவி லட்சுமியுடன் வைகுண்டத்திலுள்ள நந்தவனத்தில் உலா வருவார். அங்கு மலர் செடிகளுக்கு நடுவே ஒரு துளசி செடி இருக்கும். அவற்றைப் பார்த்துக் கொண்டே வரும் திருமால், துளசி செடி வந்ததும் அதன் அருகே நின்று கொள்வார்.

துளசியின் சிறப்பு பற்றி லட்சுமியிடம் எடுத்துச்சொல்வார். 'லட்சுமி! இந்த துளசி, அமிர்தத்துக்கு நிகரானது. இதற்கு மரணம் என்பதே இல்லை. இதை நான் மிகவும் விரும்புகிறேன். எத்தனை மாலை அணிவித்தாலும், துளசிமாலை அணிவித்தால் தான் நான் மகிழ்வேன். இதை அணிந்தால் தான் எனக்கு அழகு" என்று புகழ்வார்.

ஆனால், துளசியை மட்டும் கிருஷ்ணர் புகழ்கிறாரே என மலர் செடிகள் வருத்தப்படுவதில்லை. 'இந்த துளசியின் அருகில் நாம் நின்றதால் தானே திருமாலும், லட்சுமியும் இங்கே வரும்போது, அவர்களை நாம் ஒருசேர தரிசிக்க முடிகிறது," என்று மகிழ்ச்சியடையும். இதனால் தான், பெருமைக்குரிய துளசியை கிருஷ்ணருக்கு மாலையாக அணிவிக்கிறோம்.

துளசி மாலை அணிவித்து வழிபட்டால் கசப்பான விஷயம் அனைத்தும் முறிந்து இனிப்பான வாழ்க்கை அமையும்.
Tags:    

Similar News