வழிபாடு
பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி. (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, சுந்தரராஜ பெருமாள்,

கள்ளழகர் கோவில் தெப்பத்திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2022-02-17 05:42 GMT   |   Update On 2022-02-17 05:42 GMT
மதுரை அருகே பொய்கை கரைப்பட்டியில் கள்ளழகர் கோவில் தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என அழைக்கப்படுவது மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இது 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மாசி மாதம் பவுர்ணமி நிறைநாளில் நடைபெறும் தெப்ப திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு மாசி மக தெப்பத்திருவிழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து 15-ந் தேதி கஜேந்திர மோட்சம் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் நேற்று காலையில் நடைபெற்றது.

இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் தெப்பத்திற்கு புறப்பாடாகி சென்றார். மேலும் மண்டூக தீர்த்தம் என்ற பொய்கைகரைப்பட்டி புஸ்கரணிக்கு செல்லும் வழி நெடுகிலும் நின்று சேவை சாதித்து தொடர்ந்து பொய்கைக்கரைப்பட்டி தெப்பம் சென்று குளக்கரையை சுற்றி வந்தார்.

இதையடுத்து காலை 11.15 மணியளவில் தெப்பத்தில் அன்னப்பல்லக்கில் சுவாமி தேவியர்களுடன் எழுந்தருளினார். தொடர்ந்து தெப்பத்தில் சாமி இருமுறை வலம் வந்தார். இந்த விழாவை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். அதன் பின்னர் கிழக்கு புறம் உள்ள மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார்.

மாலையில் அதே அன்ன பல்லக்கில் சாமி தெப்பத்தில் ஒருமுறை சுற்றி வந்து தரிசனம் தந்தார். இந்த விழாைவயொட்டி தெப்பம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பின்னர் சுவாமி கள்ளழகர் கோவிலுக்கு சென்றார்.

11 ஆண்டுகளுக்கு பிறகு தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பி இருந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். இதில் அமைச்சர் மூர்த்தி, பெரிபுள்ளான் எம்.எல்.ஏ., பொய்கைகரைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி வீரணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அப்பன் திருப்பதி, சத்திரப்பட்டி போலீசார் செய்திருந்தனர்.
Tags:    

Similar News