செய்திகள்
பள்ளி மாணவிகள்

அதிகரித்து வரும் கொரோனா- பிளஸ் 2 பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா?

Published On 2021-04-06 09:19 GMT   |   Update On 2021-04-06 10:45 GMT
கொரோனா அதிகரித்து வருவதால் அடுத்த சில நாட்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 2020-2021-ம் கல்வி ஆண்டில் பள்ளிகள் பல மாதங்கள் மூடப்பட்டு கிடந்தன.

கடந்த ஜனவரி 19-ந்தேதி முதல் பிளஸ்-2, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. உயர்கல்விக்கு செல்ல பிளஸ்-2 தேர்வு அவசியம் என்பதால் அதற்கு மட்டும் தனி முக்கியத்துவம் கொடுத்து கொரோனா கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் நடந்து வருகின்றன.

அடுத்தமாதம் (மே) 3-ந் தேதி முதல் 21-ந்தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்தநிலையில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் அடுத்த சில நாட்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

எனவே பொதுத்தேர்வை நடத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார், ஆணையர் வெங்கடேசன், இயக்குனர் கண்ணப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது பொதுத்தேர்வை நடத்துவதில் ஏற்படும் சிக்கல் கள் பற்றி விவாதித்தனர்.

இதுபற்றி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிப்பது பெரும் சிக்கலாக உள்ளது. இதனால் தேர்வை பாதுகாப்பாக நடத்துவது பற்றி ஆராய்ந்து வருகிறோம்.

திட்டமிட்டபடி தேர்வை நடத்துவதா? அல்லது ஒத்தி வைக்கலாமா என விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை. சுகாதாரத்துறையிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அறிக்கை கிடைத்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுக்கப்படும்’ என்றார்.
Tags:    

Similar News