வழிபாடு
அய்யா வைகுண்டசாமி

அய்யா வைகுண்டசாமி அவதார தின வாகன பவனி இன்று தொடங்குகிறது

Published On 2022-03-03 05:54 GMT   |   Update On 2022-03-03 05:54 GMT
சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமியின் 190-வது அவதார தின விழாவை முன்னிட்டு திருவனந்தபுரம் மற்றும் திருச்செந்தூரிலிருந்து நாகர்கோவில் நோக்கி வரும் வாகன பவனி இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
அய்யா வைகுண்ட சாமியின் அவதார தின விழாவை முன்னிட்டு வருடம்தோறும் திருச்செந்தூர் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து சாமி தோப்பை நோக்கி அய்யா வழி பக்தர்கள் கலந்து கொள்ளும் வாகன பேரணி நடைபெறுவது வழக்கம். இந்த வருட வாகன பேரணி இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

திருவனந்தபுரத்தில் பத்மநாபசாமி கோவில் வடக்கு வாசலில் இருந்து வாகன பேரணி தொடங்குகிறது. இந்த வாகன பேரணியை பால.லோகாதிபதி தொடங்கி வைக்கிறார். பையன் நேம்ரிஷ் தலைமை வகிக்கிறார். இந்த வாகன பேரணி திருவனந்தபுரம் பாறசாலை, நெய்யாற்றின்கரை, மார்த்தாண்டம், தக்கலை மற்றும் வெட்டூர்ணிமடம் வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா திடலில் வந்தடைகிறது.

அதேபோல் திருச்செந்தூர், செந்தூர் அவதார பதியில் இருந்து மற்றொரு வாகன பவனி நாகர்கோவிலை நோக்கி புறப்படுகிறது.

இந்த வாகன பவனிக்கு ஜனா.வைகுந்த் தலைமை வகிக்கிறார். இந்த வாகன பவனி திருச்செந்தூர், சீர்காய்ச்சி, கூடங்குளம், செட்டிகுளம், அம்பலவாணபுரம், ஆரல்வாய்மொழி வழியாக நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது.

இதற்கிடையே இன்று மாலை 6 மணிக்கு ஆதலவிளை வைகுண்ட மாமலையில், சாமிதோப்பு தலைமைப்பதியிலிருந்து தீபம் கொண்டு சென்று ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு பையன் கிருஷ்ணராஜ் தலைமை வகிக்கிறார். பையன் கிருஷ்ண நாமமணி முன்னிலை வகிக்கிறார். பையன் செல்லவடிவு தீபம் ஏற்றுகிறார்.

திருச்செந்தூர் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து வரும் வாகன பேரணி நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது. இதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள நிழல் தாங்கல்களிலிருந்து அவதார தின ஊர்வலத்தில் கலந்து கொள்ள நடை பயணமாக வரும் பக்தர்கள் இன்று இரவு நாகர்கோவில் நாகராஜா திடலை வந்தடைகின்றனர். பின்னர் நாகராஜா கோவில் திருமண மண்டபத்தில் அய்யாவழி சமய மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு பால. ஜனாதிபதி தலைமை வகிக்கிறார். அய்யாவழி அறிஞர்கள் பலர் பேசுகின்றனர். நூல் வெளியீட்டு, விழா குறுந்தகடு வெளியீட்டு விழா ஆகியவை நடைபெறுகிறது. சிறுவர் சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

அய்யா வைகுண்ட சாமி 190-வது அவதார தின விழா ஊர்வலம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து சாமிதோப்பை நோக்கி புறப்படுகிறது. இந்த ஊர்வலத்தில் பல மாவட்டங்களைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.

அவதார தின விழாவை முன்னிட்டு நெல்லை, குமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News