செய்திகள்
வழக்கு பதிவு

உரிமம் இல்லாமல் செயல்பட்ட 63 ‘மசாஜ் கிளப்’கள் மீது வழக்கு

Published On 2021-11-22 08:44 GMT   |   Update On 2021-11-22 08:44 GMT
மசாஜ் செய்ய செல்லும் வாடிக்கையாளர்களிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியான மசாஜ் செய்ய கூடுதல் கட்டணம் வசூலித்து வந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்படும் மசாஜ் கிளப்புகள் உரிய அனுமதியின்றியும், முறைகேடாகவும் நடந்து வருவதாக ஏராளமான புகார்கள் போலீசாருக்கு வந்தன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக விபசார தடுப்பு பிரிவில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சாம் வின்சென்ட் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

அவர்கள் பணியாற்றிய போது முறைகேடாக சில மசாஜ் சென்டர்களுக்கு அனுமதி வழங்கியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி சென்னை மாநகர் முழுவதும் செயல்படும் 151 மசாஜ் கிளப்புகள், ஸ்பா மையங்களில் நேற்று முழுவதும் போலீசார் தனித்தனி குழுக்களாக சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் முறையான அனுமதி பெறாமலும், சிலர் முறைகேடாக மசாஜ் கிளப்புகளில் பாலியல் ரீதியாக தொழில் செய்து வருவதும் தெரிந்தது.

மேலும் மாநகராட்சி வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றாதது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன.

இதையடுத்து உரிய அனுமதியின்றி செயல்பட்ட 63 மசாஜ் கிளப்புகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த மையங்களில் இருந்த ஏராளமான வடமாநில பெண்கள் மீட்கப்பட்டனர். தி.நகர் காவல் மாவட்டத்தில் நடந்த சோதனையில் அசோக் நகரில் 3 பெண்கள், வளசரவாக்கத்தில் 3 பெண்கள், விருகம்பாக்கம், மாம்பலத்தில் தலா ஒரு பெண்ணும் மற்றும் திருமங்கலத்தில் 4 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டத்தில் முறைகேடாக ஒரு மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அங்கிருந்த பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

போலீசாரின் இந்த அதிரடி சோதனை பற்றி அறிந்ததும் 53 இடங்களில் இருந்த மசாஜ் சென்டர்களை பூட்டி விட்டு ஊழியர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர்.

அந்த மையங்களில் தொடர்புடையவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களிடம் முறையான விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

பெரும்பாலான மசாஜ் சென்டர்கள் தங்களது வாடிக்கையாளர்களை செல்போன் எஸ்.எம்.எஸ். முலம் அழைத்து வருகிறார்கள். தள்ளுபடி கட்டணம், பெண்கள் மசாஜுக்கு குறிப்பிட்ட கட்டணம் என்று தனித்தனியாக அனுப்புகிறார்கள்.

மசாஜ் செய்ய செல்லும் வாடிக்கையாளர்களிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியான மசாஜ் செய்ய கூடுதல் கட்டணமும் வசூலித்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

முறைகேடாக மசாஜ் சென்டர்களை நடத்தி வருபவர்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News