செய்திகள்
ராஜூவ் சர்மா, சீன பெண், நேபாள ஆண்

டெல்லி: பாதுகாப்புத்துறை தொடர்பான ரகசிய தகவல்களை சீன உளவுத்துறைக்கு அனுப்பிய பத்திரிக்கையாளர் உள்பட 3 பேர் கைது

Published On 2020-09-19 12:29 GMT   |   Update On 2020-09-19 12:29 GMT
இந்திய பாதுகாப்புத்துறை தொடர்பான ரகசிய தகவல்களை சீன உளவுத்துறைக்கு அனுப்பிய ஃப்ரீலான்சிங் பத்திரிக்கையாளர் உள்பட 3 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி:

எல்லை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. லாடாக் மோதலையடுத்து எல்லையில் இந்திய-சீன வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், இந்திய பிரதமர், ஜனாதிபதி, ராணுவ தளபதி, எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட 10 ஆயிரம் இந்தியர்களை சீனாவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வேவு பார்ப்பது கடந்த சில நாட்களுக்கு முன் தெரியவந்தது. 

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரங்கள் தொடர்பாகவும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்திய பாதுகாப்புத்துறை தொடர்பான ரகசிய மற்றும் முக்கியமான தகவல்களை சீன உளவுத்துறைக்கு அனுப்பிய டெல்லியை சேர்ந்த ஃப்ரீலான்சிங் பத்திரிக்கையாளர் ராஜீவ் சர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர். 

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் வசித்து வந்த சீனாவை சேர்ந்த பெண் மற்றும் நேபாளத்தை சேர்ந்த ஆண் என மேலும் 2 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட வெளிநாட்டினரிடமிருந்து ஃப்ரீலான்சிங் பத்திரிக்கையாளர் ராஜூவ் சர்மா மிகப்பெரிய அளவில் பணம் பெற்றுக்கொண்டு இந்திய பாதுகாப்புத்துறை தொடர்பான பல்வேறு தகவல்களை அனுப்பியுள்ளார். 

இந்த உளவு வேலையில் ஈடுபட்டது தொடர்பான விசாரணைக்காக கடந்த 14-ம் தேதி முதலே ராஜூவ் சர்மா டெல்லி போலீசாரின் கட்டுப்பாட்டில் இருந்தார். 

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சர்மா சீன பெண் மற்றும் நேபாள ஆண் மூலமாக இந்திய பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை சீன உளவு அமைப்புக்கு அனுப்பியதை ஒப்புக்கொண்டார். 

இதையடுத்து அவர் இன்று முறைப்படி கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News