செய்திகள்
மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

உடுமலை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2021-11-21 11:46 GMT   |   Update On 2021-11-21 12:00 GMT
விரைவில் சீரான குடிநீர் வழங்கப்படும் என போலீசார் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் எல்லையில் அமைந்துள்ள செல்லப்பம்பாளையம் கிராம ஊராட்சியில் 950 மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். திருமூர்த்தி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் குடிப்பதற்கும் சமைப்பதற்கும் தண்ணீரின்றி மிகுந்த அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து ஊராட்சித் தலைவரிடம் முறையிட்ட போது தற்போது அவர் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்து சீரமைத்தபின்பு குடிநீர் வினியோகம் சீராக இருக்கும் என கூறியுள்ளார்.

ஆனாலும் கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் உபயோகிக்கவில்லை. இதனால்  பாதிக்கப்பட்ட  கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் செல்லப்பம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே இன்று காலை   சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த தளி போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து  விரைவில் சீரான குடிநீர் வழங்கப்படும் என போலீசார் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 
Tags:    

Similar News