செய்திகள்
அமித்ஷா

நேதாஜியை மக்கள் மறப்பதற்கு ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன: அமித்ஷா

Published On 2021-02-20 02:11 GMT   |   Update On 2021-02-20 02:11 GMT
நேதாஜியை மறப்பதற்கு ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அவை தோல்வியடைந்து விட்டதாகவும் உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
கொல்கத்தா :

மேற்கு வங்காளத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜனதா சார்பில் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களை கவுரவிக்கும் வகையில் ‘சவுரியாஞ்சலி திட்டம்’ என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று தொடங்கி வைத்தார்.

மேலும் மேற்கு வங்காளத்தின் புரட்சியாளர்களான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், குதிராம் போஸ், ராஷ் பெகாரி போஸ் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாறு குறித்த கண்காட்சி ஒன்றை திறந்து வைத்த அவர், சைக்கிள் பேரணி ஒன்றையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், சுபாஷ் சந்திரபோசை வெகுவாக புகழ்ந்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஒரு திறமையான மாணவராக விளங்கிய சுபாஷ் சந்திரபோஸ் இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் தனது பணியை விட்டுவிட்டு சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ஆங்கிலேயர் ஆட்சியில் தனது சுகபோக வாழ்க்கையைவிட தேசம்தான் முக்கியம் என விடுதலை போராட்டத்தில் தன்னை கரைத்துக்கொண்டார்.

அந்த காலத்தில் அவர் எப்படிப்பட்ட செல்வாக்கோடு திகழ்ந்தார் என்பதற்கு, 2 முறை காங்கிரஸ் தலைவராக தேர்வு பெற்றதே சான்றாக அமைகிறது. அதுவும் ஒருமுறை மகாத்மா காந்தியையே வீழ்த்தி காங்கிரஸ் தலைவரானார்.

நேதாஜியின் வீரம் மிகுந்த உணர்வும், உற்சாகமும்தான் இந்திய ராணுவம் உருவாக வழிவகுத்தது. அதற்கான பயணம் வங்காள மண்ணிலிருந்து தொடங்கியது. தியாகம்தான் ஒரு நாட்டை முன்னோக்கி எடுத்துச்செல்லும், அது ஒருவரின் வாழ்க்கையையே தியாகம் செய்வதும் ஆகும்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் நேதாஜியை மக்கள் எப்படி அன்பு செய்து, மதித்து வாழ்ந்தனரோ, அப்படியே இன்றும் அவரை மக்கள் அன்பு செய்கின்றனர்.

ஆனால் இத்தகைய புகழ்வாய்ந்த நேதாஜியை மக்கள் மறந்து விடுவதற்காக ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை வெற்றி பெறவில்லை.

அவரது தியாகம், தேசப்பற்று, தீரம், நாட்டுக்கு ஆற்றிய தன்னலமற்ற சேவை போன்றவை என்றைக்கும் நிலைத்திருப்பதுடன், வரும் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும் இருக்கும்.

எனவே நேதாஜியின் வாழ்க்கை மற்றும் அவர் பட்ட துன்பங்கள் குறித்து இளைய தலைமுறையினர் படிக்க வேண்டும். ஏனெனில் வரலாற்றை அறிந்த இளம் தலைமுறையினரால் மட்டுமே ஒரு வலுவான தேசத்தை உருவாக்க முடியும்.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.
Tags:    

Similar News