பெண்கள் உலகம்
ஏமாற்றம்

எதிர்பார்ப்பால் ஏற்படும் ஏமாற்றத்தைக் கையாளும் வழிகள்

Published On 2022-04-04 03:27 GMT   |   Update On 2022-04-04 06:43 GMT
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதன் காரணமாக ஏற்படும் ஏமாற்றம் உறவை முறிக்கும் அளவுக்கு, பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
எதிர்பார்ப்பில்லாமல் வாழ்வில் எந்த நிகழ்வும் நடக்காது. சிறுசிறு விஷயங்கள் தொடங்கி பெரும் முயற்சிகள் வரை, அனைத்துமே எதிர்பார்ப்பு என்ற உணர்வின் நூலில்தான் பயணிக்கிறது. எதிர்பார்ப்பு பல நேரங்களில் ஏமாற்றத்தைத் தரும்.

நிகழ்வு சிறியதோ, பெரியதோ, அதனால் ஏற்படும் பாதிப்பு எப்போதும் ஒரே மாதிரியான உணர்வையே வெளிப்படுத்தும். இவ்வாறு எதிர்பார்ப்பால் ஏற்படும் ஏமாற்றத்தைக் கையாள உதவும் வழிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

பெரும்பாலும் உறவுகளுக்குள்தான் அதிகமான எதிர்பார்ப்புகள் இருக்கும். மகிழ்ச்சியான உறவுக்குள்ளும், நாம் எளிதாக துன்பத்தை ஏற்படுத்திவிடு
கிறோம். எந்தவொரு உறவாக இருந்தாலும் எதிர்பார்ப்பில்தான் தொடங்குகிறது என்பதை புரிந்துகொண்டால், சுமுகமான உறவை கையாள முடியும்.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதன் காரணமாக ஏற்படும் ஏமாற்றம் உறவை முறிக்கும் அளவுக்கு, பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையால், உறவுக்குள் ஏமாற்றம் வரும்போது, முடிந்தவரை அதற்கான காரணத்தை ஏற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். அதேநேரம் மீண்டும் இதுபோன்ற சூழல் ஏற்படாமல் இருக்கும் வண்ணம் நடந்துகொள்ள வேண்டும். அன்புக்குரியவர்களிடம் எதிர்பார்ப்பைக் குறைத்து, அன்பை கொடுப்பதில் மட்டும் கவனம் செலுத்தினாலே வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

வாழ்க்கை நடைமுறை, சூழல் அமைப்பு, நாம் எதிர்பார்த்த செயலின் தன்மை மற்றும் நபர் என அனைத்திலும் நடைமுறை சாத்தியக்கூறுகளை
முன்னரே கணித்து செயல்படுவது, எதிர்பார்ப்பைக் குறைத்து, சகஜ நடைமுறையை உண்டாக்கும்.

பிடித்த உணவை சாப்பிட முடியாதது, உணவின் சுவை, பிடித்த ஆடையை அணியமுடியாமல் போவது, பயணம், செடி அல்லது செல்லப்பிராணி வளர்ப்பு என அன்றாட வாழ்வில், பல்வேறு காரணங்களால் நமக்கு ஏமாற்றம் நிகழலாம். அதையே நினைத்துக்கொண்டு இருக்காமல், மற்ற விஷயங்களில் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

எந்த இடத்திலும், சூழலிலும் நேர்மையாக இருந்தால் எவ்வித உணர்வும் நம்மை கவலைக்கு உள்ளாக்காது. உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் தன்மையை மேம்படுத்திக்கொண்டால், எவ்வளவு பெரிய ஏமாற்றத்தையும், இதமான புன்னகையில் எளிதாகக் கடந்து சென்றுவிட முடியும்.
Tags:    

Similar News