ஆன்மிகம்
ராமேசுவரம் கோவில்

ராமேசுவரம் கோவிலில் நாளை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை

Published On 2021-03-05 05:30 GMT   |   Update On 2021-03-05 05:30 GMT
ராமேசுவரம் கோவிலில் தொடங்கியுள்ள மாசி மகா சிவராத்திரி திருவிழாவின் மூன்றாவது நாளான நாளை(சனிக்கிழமை) கோவில் நடைதிறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ராமேசுவரம் :

ராமேசுவரம் கோவிலில் தொடங்கியுள்ள மாசி மகா சிவராத்திரி திருவிழாவின் மூன்றாவது நாளான நாளை(சனிக்கிழமை) கோவில் நடைதிறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நாளை அதிகாலை 2.30 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு 3 மணி முதல் 4 மணி வரையிலும் ஸ்படிக லிங்க தரிசனமும், தொடர்ந்து வழக்கமான காலபூஜைகள் நடைபெற்று அதன் பின்னர் காலை 6 மணி அளவில் கோவில் நடை சாத்தப்படும்.

இதைதொடர்ந்து கோவிலிலிருந்து சுவாமி, அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி கோவிலின் ரதவீதி சாலை மற்றும் நடுத்தெரு, திட்டக்குடி சந்திப்பு சாலை வழியாக கெந்தமாதனபர்வதத்தில் உள்ள ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளுகின்றனர். அங்கு மாலை 6 மணிக்கு மேல் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை, பூஜைகள் நடைபெற்று மீண்டும் அங்கிருந்து புறப்பாடாகி இரவு 10 மணியளவில் சாமி, அம்பாள் மீண்டும் கோவிலுக்கு வந்தடைவர்.

நாளை கெந்தமாதனபர்வதம் மண்டகப்படிக்கு சுவாமி, அம்பாள் செல்வதை ஒட்டி காலை 6 மணி முதல் இரவு வரையிலும் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் நீராடவோ, சாமி தரிசனம் செய்யவோ பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News