ஆன்மிகம்
பசுக்கு உணவு அளித்தல்

நவகிரகங்களால் உயர்வு கிடைக்க செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள்

Published On 2021-04-10 05:47 GMT   |   Update On 2021-04-10 05:47 GMT
ஒன்பது கோள்களாலும் உயர்வு பெறும் வகையில் அவர்களைச் சிறப்பிப்பதற்கான வழிமுறைகளை முன்னோர் ஏற்படுத்திவைத்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.
ஏழு கிரகங்களோடு ராகு-கேது சேர்த்து ஒன்பது கோள்களும் பருவகால மாற்றங்களுக்குக் காரணமாக இருந்துகொண்டே, ஜீவராசிகளின் சிந்தனை மற்றும் செயல்களுக்கும் காரணமாகின்றனர்.

நவகிரகங்களின் தாக்கம் தொடாத இடமே உலகில் இல்லை. அவர்களை வணங்கிச் சிறப்பிப்பதால் நம் தேகம் நலமாகும்; சிந்தனை வளமாகும்; செயல்கள் சிறப்படையும். ஒன்பது கோள்களாலும் உயர்வு பெறும் வகையில் அவர்களைச் சிறப்பிப்பதற்கான வழிமுறைகளை முன்னோர் ஏற்படுத்திவைத்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

விரிவான பரிகார பூஜைகள், ஹோமங்கள் மட்டுமன்றி, எளிய வழிமுறைகளையும் விவரிக்கின்றன ஜோதிட நூல்கள். அவற்றைச் செய்வதால், ஒன்பதுகோள்களும் உன்னத பலன்களை அருளும்.

எளிய பரிகார வழிமுறைகள்

* காய்ச்சாத பசும்பாலை 15 நாள்கள் தொடர்ந்து அருகிலுள்ள ஆலயங்களுக்கு அபிஷேகத்துக்கு வழங்கலாம். அதேபோல், தொடர்ந்து 45 நாள்களுக்கு, அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று நீர் நிரம்பிய தேங்காயைச் சமர்ப்பித்து வழிபட வேண்டும்.

* தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிவதால், மங்கலம் உண்டாகும்.

* பயணம் செய்யத் தொடங்குமுன் கைப்பிடி அரிசி அல்லது கோதுமையை ஆற்று நீரில் விடுவதால் நலம் உண்டாகும்.

* அதேபோல், கிரக பாதிப்புகள் நீங்குவதற்கு, உரிக்காத தேங்காயையும் ஓடு நீக்காத பாதாம் பருப்பையும் ஆற்று நீரில் இடுதலையும் பரிகாரமாகச் சொல்வார்கள்.

* இரவு படுக்கப் போகும்போது ஒரு குவளையில் நீரெடுத்து தலையணை அருகே வைத்துக்கொண்டு, அதை காலையில் ஒரு செடியில் ஊற்றிவிட வேண்டும். இதை 43 நாள்கள் செய்யவேண்டும்.

* உறவுகள் அனைவரையும் அழைத்து சூரியனுக்குரிய யாகங்கள் செய்வதால் நன்மைகள் உண்டாகும். இயலாதவர்கள், தினமும் சூரிய வணக்கம் செய்வதுடன் சூரியனுக்கு நீர் அளிக்கவும் வேண்டும்.

* வியாழனன்று பூண்டு, வெங்காயம் உண்பதைத் தவிர்க்கவும். அந்த நாளில் கோயில்களில் இனிப்பு நைவேத்தியம் சமர்ப்பித்து, பிரசாதமாக வழங்கலாம்.

* அனுதினமும் விநாயகர் மற்றும் அனுமனை வழிபடுவதால், கிரக தோஷங்கள் நம்மைவிட்டு விலகியோடும்.

* மாதப்பிறப்பு நாள்களில் சர்க்கரை, கடலைப் பருப்பு, உப்பு, நெய், மாவு போன்றவற்றை தானம் அளிக்கலாம்.

* குரங்குகளுக்கு வாழைப்பழம் அளித்தல், நாய்க்கு உணவிடுதல் போன்ற காரியங்கள் புண்ணியம் சேர்க்கும்; தோஷம் நீக்கும். அதேபோல், இரவில் ஒரு பிடி பச்சைப் பயிரை ஊறவைத்து மறுநாள் புறாக்களுக்கு அளிக்கவும்.

* ‘வெள்ளிக்கிழமைகளில் 100 பசுக்களுக்கு புல் அளிக்கவும். செவ்வாய்க் கிழமை இரவுகளில் தலையருகே கீரைகளை வைத்துக்கொண்டு உறங்கி, அதை மறுநாள் பசுக்களுக்கு தானம் அளிக்கவும். இப்படி மூன்று செவ்வாய்க்கிழமைகள் செய்வது நல்லது.

* விசேஷ தினங்கள் மற்றும் பண்டிகை காலங்களில், ஏழைகளுக்கு அன்னதானம் அளிப்பது மிகவும் விசேஷம். அதேபோல் ஏழை மாணவர்களின் படிப்புக்கும், முதியோரின் ஜீவாதாரத்துக்கும், ஏழைப் பெண்களின் திருமணத்துக்கும் இயன்ற உதவிகளைச் செய்வதன்மூலம், நம் முன்வினைகள் நீங்கும்;
Tags:    

Similar News