செய்திகள்
ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் விண்வெளி வீரர் நிக் ஹேக்

இந்தியாவின் விக்ரம் லேண்டரை பார்த்தீர்களா? விண்வெளி வீரரிடம் கேள்வி கேட்ட ஹாலிவுட் நடிகர்

Published On 2019-09-18 21:03 GMT   |   Update On 2019-09-18 21:03 GMT
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் குறித்து ஹாலிவுட் நடிகர் பிராட் பிட், விண்வெளி வீரர் நிக் ஹேக் கேள்வி எழுப்பினார்.
வா‌ஷிங்டன்:

பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் நடித்த ‘ஆட் ஆஸ்ட்ரா’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் பிராட் பிட் விண்வெளி வீரராக நடித்துள்ளார்.

இந்த நிலையில் ‘ஆட் ஆஸ்ட்ரா’ படத்தின் விளம்பரத்துக்காக அமெரிக்காவின் வா‌ஷிங்டன் நகரில் உள்ள நாசாவின் தலைமையகத்துக்கு பிராட் பிட் சென்றார்.

அப்போது சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்த விண்வெளி வீரர் நிக் ஹேக்குடன் ‘வீடியோ கால்’ மூலம் பேசினார். விண்வெளி மையத்தில் உள்ள வாழ்க்கை குறித்து சுமார் 20 நிமிடங்கள் வரை இருவரும் சுவாரஸ்யமாக உரையாடி கொண்டனர்.அப்போது, ‘‘விண்வெளி வீரர் கதாபாத்திரத்தில் யார் நம்பும்படியாக இருக்கிறார்? நானா? அல்லது கிராவிட்டி திரைப்படத்தில் நடித்த ஜார்ஜ் குளூனியா?’’ என பிராட் பிட் நகைச்சுவையாக கேட்டார். அதற்கு சிரித்துக்கொண்டே பதில் அளித்த நிக் ஹேக், ‘‘நிச்சயமாக நீங்கள் தான்’’ என்று கூறினார்.அதன் பின்னர், நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் குறித்தும் பிராட் பிட் கேள்வி எழுப்பினார். அப்போது அவர் ‘‘இந்தியாவின் மூன் லேண்டரைப் பார்த்தீர்களா?’’ என கேட்டார். அதற்கு ‘‘துரதிர்‌‌ஷ்டவசமாக அதனை நான் பார்க்கவில்லை’’ என ஹேக் பதிலளித்தார். இந்த வீடியோ காட்சிகளை நாசா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
Tags:    

Similar News