செய்திகள்
அமைச்சர் சேகர்பாபு

வீடுகளில் பிள்ளையாரை வழிபட்டு நீர்நிலைகளில் கரைக்கலாம்- அமைச்சர் சேகர்பாபு தகவல்

Published On 2021-09-07 06:09 GMT   |   Update On 2021-09-07 06:09 GMT
வீடுகளில் களிமண்ணால் ஆன பிள்ளையாரை வைத்து வழிபட்டு அதனை நீர்நிலைகளில் தனித்தனியாக கொண்டு சென்று கரைக்கலாம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி சென்னை கொண்டிதோப்பு பழனியாண்டவர் கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் சமேத வேதபுரீசுவரர் கோவில், இலந்தை முத்துமாரியம்மன் கோவில் மற்றும் மின்ட் அங்காளம்மன் கோவில் உள்ளிட்ட 4 கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். உடன் அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் 200 ஆண்டுகள் பழமையானது. கடந்த 60 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெறாமல் கோவில் பழுதடைந்துள்ளது. பழமையான இந்த கோவிலை புதுப்பிக்க தொல்லியல் துறையின் அனுமதிபெற்று புனரமைப்பு பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் திருப்பணிகள் நடக்காத கோவில்களில் திருப்பணிகள் நடைபெற நிதி வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஒரு சில கோவில்களில் மொட்டை அடிப்பதற்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் முதல்-அமைச்சர் அனைத்து கோவில்களிலும் மொட்டை அடிப்பதை இலவசமாக்க உத்தரவிட்டார். அதே நேரத்தில் அப்பணியினை செய்யும் பணியாளர்களுக்கு மொட்டை அடிப்பதற்கான கட்டணத்தை அரசே வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடத்த கொரோனா தொற்று காரணமாக அனுமதி அளிக்கப்படவில்லை. இது மாநில அரசு தன்னிச்சையாக எடுத்த முடிவு அல்ல. மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா மாநில அரசுகளுக்கு அறிவுறுத்திய படியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு கடவுளை வைத்து சிலர் அரசியல் செய்ய பார்க்கிறார்கள்.

அரசியல் செய்ய எவ்வளவோ வழிகள் உள்ளது. ஆனால் இதுபோன்று மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி அரசியல் செய்ய நினைத்தால் நிச்சயம் தமிழக அரசு அதை அனுமதிக்காது. இங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

பக்கத்து மாநிலங்களில் கொரோனா தொற்று 30 ஆயிரத்தை தாண்டுகிறது. உயிர் பலி எண்ணிக்கை 100-யை தாண்டுகிறது. அதுபோல் தமிழகத்திலும் நடைபெறக்கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே இங்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நோய் குணமாக வேண்டுமென்றால் கசப்பு மருந்து சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் அதுபோல தான் இதுவும்.

வீடுகளில் களிமண்ணால் ஆன பிள்ளையாரை வைத்து வணங்கி வழிபட்டு அதனை நீர்நிலைகளில் தனித்தனியாக கொண்டு சென்று கரைக்கலாம். இவ்வாறான வழிபாட்டை விநாயக பெருமான் ஏற்றுக்கொண்டு நிச்சயம் பொதுமக்களுக்கு நன்மை செய்வார்.

கோவில்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பரிசோதனை செய்தல், கிருமிநாசினி வழங்குதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News