லைஃப்ஸ்டைல்
ஜோடி

திருமணத்திற்கு முன்பு ஜோடிகள் பேச வேண்டியவை

Published On 2020-08-28 07:58 GMT   |   Update On 2020-08-28 07:58 GMT
திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது.
இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு முன்பே மனம் விட்டு பேசும் சந்தர்ப்பங்கள் வாய்ப்பதால் மணமகனும், மணப்பெண்ணும் தங்கள் அபிலாஷைகளை பகிர்ந்து கொள்கிறார்கள். துணையின் விருப்பங்கள், எதிர்பார்ப்புகளையும் அறிந்து கொள்கிறார்கள். அதனால் திருமணத்திற்கு முன்பே இருவருக்கும் இடையே ஓரளவு பரஸ்பர புரிதல் உணர்வு ஏற்பட்டுவிடுகிறது. திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது.

தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து கொள்கிறீர்களோ அதே அளவுக்கு பிடிக்காத விஷயங்களையும் எடுத்துக்கூறிவிட வேண்டும். பழக்கவழக்கங்கள், விருப்பு, வெறுப்புகளை ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வது அவசியம். அது திருமணத்திற்கு பின்பு எழும் பிரச்சினைகள், நடைமுறை சிக்கல்களை எளிதாக தீர்ப்பதற்கு உதவும். சமையல், பயணம், படிப்பு போன்றவற்றில் இருந்து துணையின் வாழ்க்கை முறையை பற்றி அறியவும் முயற்சிக்கலாம்.

திருமணத்திற்கு பிறகு மனைவி வேலைக்கு செல்கிறாரா? இல்லையா? என்பதையும் ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்திவிட வேண்டும். இந்த விஷயத்தில் துணை யின் விருப்பம் என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப முடிவு எடுக்கவேண்டும். அப்போதுதான் இருவருக்கும் இடையே தவறான புரிதல் ஏற்படாது.

திருமணத்திற்கு பிறகு துணைக்காக உணவுப்பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம். அது இருவரின் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம். கூடுமானவரை இப்போது கடைப்பிடிக்கும் உணவுப்பழக்கத்தை தொடர்ந்து பின்பற்ற அனுமதிப்பதுதான் சரியானது. அன்பும், ஆரோக்கியமும் வேறுபட்டது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். துணை, அசைவ பிரியராக இருந்தால் தான் விரும்பாவிட்டாலும் அவருக்கு பிடித்தமானதைவாங்கிக்கொடுப்பதுதான் சிறப்பானது. இதுபற்றி முன்கூட்டியே பேசி தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது.

திருமணத்திற்கு முன்பு துணை நன்றாக சமையல் பழகிவிட்டாரா? என்பதை கேட்டறிந்து கொள்வதில் தவறில்லை. திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்ல விரும்பும் பட்சத்தில் சமையல் வேலையில் சின்ன சின்ன உதவிகளை செய்வதற்கும் முன்வர வேண்டும். குறிப்பாக குழந்தை பெற்றெடுக்கும் சமயத்தில் பக்கபலமாக இருக்க வேண்டும். துணை ஒருபோதும் பசியுடன் இருப்பதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது.

திருமணத்திற்கு பிறகு நண்பர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டிய சூழல் உண்டாகும். குறிப்பாக பெண்கள் ஆண் நண்பர்களிடம் இருந்து முழுவதுமாக விலக வேண்டிய நிர்ப்பந்தம் எழும். ஏனெனில் பெரும்பாலான கணவர்கள் அதை விரும்புவதில்லை. திருமணத்திற்கு முன்பே வருங்கால கணவரிடம் அதுபற்றி பேசிவிடுவது நல்லது. தோழமையை தொடரவிரும்பும் பட்சத்தில் துணையிடம் அதுபற்றி விவாதித்து விடுவது நல்லது.

திருமணத்திற்கு பிறகு சிலர் குழந்தை பிறப்பை சில காலம் தள்ளிப்போட விரும்புவார்கள். இதுபற்றி இருவரும் மனம்விட்டு பேசிவிட வேண்டும். குழந்தை பிறப்பை தள்ளிப்போட விரும்பினால் எவ்வளவு காலம்? அதற்கான காரணம் பற்றியும் விவாதிக்க வேண்டியது அவசியம்.

குழந்தை பெற்றெடுத்ததும் அவர்களுக்கான கல்வி, வளர்ப்பு பற்றிய செலவுகள் குறித்தும் திட்டமிட்டு செயல்படுவதும் முக்கியமானது.

இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் வீட்டு வேலை சுமை பெண்கள் மீதுதான் விழும். திருமணத்திற்கு பிறகு வீட்டு வேலைகளுக்கு உதவியாக பணிப்பெண் தேவை என்றால் அதுபற்றி முன்கூட்டியே துணையிடம் பேசி விடுவது நல்லது.

தற்போது அணியும் ஆடை கலாசாரத்தையே திருமணத்திற்கு பிறகும் பின்பற்ற நிறைய பெண்கள் விரும்புவார்கள். அதுபற்றி முன்கூட்டியே துணையிடம் பேசிவிடுவது நல்லது. துணை ஆட்சேபனை தெரிவிக்கும் பட்சத்தில் உங்கள் விருப்பத்தை விளக்கி கூறுங்கள். மேற்கத்திய ஆடைகள் மீது மோகம் இருந்தால் அவற்றை கண்ணியமாக அணிவதை துணையிடம் தெளிவுபடுத்திவிடுங்கள்.

பணப்புழக்கம் பெண்கள் விஷயத்தில் முக்கியமானது. திருமணத்திற்கு முன்பே நிதி நிலைமை பற்றி வெளிப்படையாக பேசிவிட்டால் திருமணத்திற்கு பிறகு தேவையற்ற செலவுகளை தவிர்த்துவிடலாம். இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் யார் எவ்வளவு செலவிட வேண்டும்? சேமிப்புக்கு எவ்வளவு ஒதுக்க வேண்டும் என்பது பற்றி கலந்தாலோசித்துவிடுங்கள். ஏனெனில் பண விஷயம்தான் குடும்பத்தில் நிலவும் அதிக பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது. 
Tags:    

Similar News