ஆன்மிகம்
சாமி சிலைகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட போது எடுத்த படம்.

நவராத்திரி விழாவுக்கு திருவனந்தபுரம் சென்ற சாமி சிலைகள் குமரிக்கு வந்தன

Published On 2020-10-30 04:22 GMT   |   Update On 2020-10-30 04:22 GMT
நவராத்திரி விழாவுக்கு திருவனந்தபுரம் சென்ற சாமி சிலைகள் மீண்டும் குமரிக்கு வந்தடைந்தன. எல்லை பகுதியான களியக்காவிளையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில்தான் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வந்தது. திருவிதாங்கூர் சமஸ்தான தலைநகராக திருவனந்தபுரம் மாற்றப்பட்டதை தொடர்ந்து 1840-ம் ஆண்டு சுவாதி திருநாளன்று மகாராஜா காலத்தில் நவராத்திரி விழா திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது.

திருவனந்தபுரத்தில் நடைபெறும் விழாவில் குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய 3 சாமி சிலைகளும் யானை மீது, பல்லக்கின் மீதும் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சாமி சிலைகள் பல்லக்கில் மட்டும் எடுத்து செல்லப்பட்டது. கொண்டு செல்லப்பட்ட சாமி சிலைகள் திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் கலந்து கொண்டன. சாமி சிலைகளுக்கு 10 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

நவராத்திரி விழா முடிந்ததையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை (27-ந் தேதி) திருவனந்தபுரத்தில் இருந்து சாமி சிலைகள் குமரிக்கு புறப்பட்டன. நேற்று காலை தமிழக- கேரள எல்லையான களியக்காவிளைக்கு சாமி சிலைகள் வந்தடைந்தன. சாமி சிலைகளுக்கு குமரி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் சாமி சிலைகள் படந்தாலுமூடு, குழித்துறை சந்திப்பு வழியாக குழித்துறை மகாதேவர் ஆலயத்துக்கு வந்தடைந்தன. அங்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அங்கிருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை புறப்படும் சாமி சிலைகள் பத்மநாபபுரம் அரண்மனையை வந்தடையும்.

பின்னர் அங்கிருந்து அந்தந்த ஆலயங்களுக்கு சாமி சிலைகள் கொண்டு செல்லப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
Tags:    

Similar News