லைஃப்ஸ்டைல்
கர்ப்பிணி பெண்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கி இருக்கும் கொரோனா தாக்கம்

கர்ப்பிணி பெண்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கி இருக்கும் கொரோனா தாக்கம்

Published On 2020-08-14 04:51 GMT   |   Update On 2020-08-14 04:51 GMT
கொரோனா நோய் தொற்று ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் பெரும்பாலான கர்ப்பிணி பெண்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது.
கர்ப்பகாலத்தில் உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக இருந்தால்தான் வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். கொரோனா நோய் தொற்று ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் பெரும்பாலான கர்ப்பிணி பெண்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது. பொதுவாகவே கர்ப்பகாலத்தில் பெண்கள் மிகுந்த கவனமுடன் செயல்படுவார்கள். எனினும் தற்போதைய சூழ்நிலையில் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியமானது. சமூக விலகலை கடைப்பிடிப்பதும், வீட்டிலேயே தங்கி இருப்பதும் பாதுகாப்பானது.

கொரோனா ஏற்படுத்தி இருக்கும் அச்சம் காரணமாக பெரும்பாலானோர் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்லும் வழக்கத்தை கைவிட்டுவிட்டார்கள். எல்லோருமே சமூக சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வதற்கு பழகிக்கொண்டிருக்கிறார்கள். என்றாலும் மற்றவர்களைவிட கர்ப்பிணி பெண்களின் மனநிலை மிகுந்த அழுத்தத்திற்கு ஆளாகும். ஏனெனில் இந்த நோய் தொற்று தொடர்பான பல்வேறு சிந்தனைகள் மனதை வருத்தும். வயிற்றில் வளரும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் நேர்ந்துவிடக்கூடாது என்ற கவலை மனதை வாட்டி எடுக்கும்.

“இந்த காலகட்டத்தில் கர்ப்பிணி பெண்களின் எண்ண ஓட்டங்கள் நேர்மறையாக இருக்க வேண்டும். உங்களையும், வயிற்றில் வளரும் கருவையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக மன ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். எந்தவொரு சூழலிலும் மனதை அமைதியாக வைத்திருப்பது அவசியமானது. இல்லாவிட்டால் கர்ப்ப காலம் கடினமாக இருக்கும். நெரிசலான இடங்களில் இருந்து விலகி உங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். வீட்டிலேயே அதிகமான நேரம் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். சுகாதாரத்தையும் முறையாக கடைப்பிடித்து வாருங்கள். கொரோனாவுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது கர்ப்ப காலம் வித்தியாசமாகவும், கடினமாகவும்தான் இருக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப நாம் மாறிக்கொள்ள வேண்டும்” என்கிறார் ஆயுர்வேத நிபுணரான டாக்டர் பபிதா. சில வழிமுறைகளை பின்பற்றுவதற்கும் பரிந்துரை செய்கிறார்.

தினசரி கால அட்டவணை ஒன்றை உருவாக்குங்கள். அதில் உணவு பழக்கம், தியானம், யோகா, சரும பராமரிப்பு, போதுமான தூக்கம், வழக்கமான பரிசோதனை உள்ளிட்ட பட்டியலை தயார் செய்யுங்கள். அவற்றை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுத்துங்கள்.

கர்ப்ப காலத்தில் சரியான நேரத்தில் பரிசோதனை செய்வது தாய்க்கும், சேய்க்கும் மிகவும் முக்கியமானது. ஆன்லைன் மருத்துவ சேவை மூலம் மகளிர் மருத்துவ நிபுணருடன் தொடர்பில் இருங்கள். பிரசவ நேரம் நெருங்கிவிட்டால் பிரசவம் மற்றும் குழந்தை பிறப்புக்கு பிந்தைய தேவைகள் பற்றி தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். உடலையும், மனதையும் நெகிழ்வாக வைத்திருங்கள்.

கர்ப்ப காலத்தில் சரும பராமரிப்பு என்பது தாய்மையின் முக்கிய அங்கமாகும். சருமத்தை ஈரப்பதமாக வைத்திருங்கள். அவ்வப்போது மசாஜ் செய்து வாருங்கள். அதன் மூலம் கர்ப்ப காலத்தில் எதிர்கொள்ளும் சரும பிரச்சினைகளை தவிர்க்கலாம். மசாஜ் செய்வதற்கு பொருத்தமான எண்ணெய்யைப் பயன்படுத்துங்கள். அது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச்செய்யும். எதை உபயோகித்தாலும் அவை ரசாயன கலப்பில்லாத மூலிகை தயாரிப்புகளாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

தினமும் சுவாச பயிற்சி மேற்கொள்ளுங்கள். அது தேவையற்ற பதற்றத்தை போக்கி மனதை அமைதியாக வைத்திருக்க உதவும். இசைக்கருவிகள் வாசிக்கலாம். மனதிற்கு பிடித்தமான பாடல்களை கேட்டு ரசிக்கலாம். புதிய மொழியை கற்றுக்கொள்ளலாம்.

தாய்ப்பால் கொடுப்பதற்காக மார்பகங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு முன்பும், பின்பும் மார்பகத்தை சுத்தம் செய்யுங்கள். குழந்தையின் கைகளையும் அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள்.

கொரோனா வைரஸ் பற்றிய அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள். அதற்காக கொரோனா பற்றிய எதிர்மறையான செய்திகளை படிக்காதீர்கள். அது தேவையற்ற பீதியையும், பதற்றத்தையும் ஏற்படுத்திவிடும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொள்ளுங்கள். அது மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். 
Tags:    

Similar News