செய்திகள்
கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி மன்னார்குடி சாஸ்தா கோவிலில் வழிபாடு

Published On 2020-11-03 08:47 GMT   |   Update On 2020-11-03 08:47 GMT
அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி அவரது சொந்த ஊரான மன்னார்குடி சாஸ்தா கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவாரூர்:

உலக நாடுகளே ஆவலுடன் எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது. அதில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ எதிர்த்து ஜனநாயக கட்சி போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் (வயது 55) என்பவர் போட்டியிடுகிறார்.

இவரது தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள பைங்காநாடு கிராமத்தை சேர்ந்தவர்கள்.

ஸ்டெனோகிராபர் ஆக வாழ்க்கையை தொடங்கிய கோபாலன், ஆங்கிலேய அரசில் சிவில் சர்வீஸ் பணியில் பணியாற்றியவர். 1930-ம் ஆண்டு சாம்பியா நாட்டுக்கு கொடிசியாவில் இருந்து வந்த அகதிகளை கணக்கெடுப்பு செய்வதற்காக இந்திய அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அமெரிக்காவில் குடியேறியுள்ளார். இவருக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளில் சியாமளா கோபாலன் என்பவருக்கு மகளாகப் பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ். இவர் சட்டப்படிப்பு பயின்றவர். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். சான் பிரான்சிஸ்கோ மற்றும் கலிபோர்னியாவில் அட்டார்னி ஜெனரலாக பதவி வகித்துள்ளார். இவரது கணவர் டக்ளஸ் ஆவார்.

இவர், கடந்த 2019-ம் ஆண்டில் எழுதிய புத்தகத்தில் தனது தாத்தா குறித்து பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். தனக்கு ஊக்க சக்தியாக தாத்தா திகழ்வதாகவும் கடந்த 1991-ம் ஆண்டு சென்னையில் தனது தாத்தா கோபாலனுக்கு 80-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட போது சென்னை வந்திருந்ததாகவும் அங்கு அனைத்து குடும்பத்தினரும் கூடியிருந்தது மகிழ்ச்சியாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் முதன் முதலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் போட்டியிடுகிறார் என்பதும், தங்கள் கிராமத்தை பூர்வீக பூர்வீகமாகக் கொண்ட கோபாலன் என்பவரின் பேத்தி இத்தகைய உயர்ந்த பதவிக்கு போட்டியிடுவதன் மூலம் தங்களது பைங்காநாடு கிராமம் உலகப்புகழ் பெற்றுவிட்டதாகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்கும் நாளை எதிர்பார்த்திருப்பதாகவும் பைங்காநாடு கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தேர்தல் நடைபெறும் இன்றைய தினம் அவர்களது குடும்பத்தினரின் முக்கிய வழிபாட்டு ஆலயமாக இருந்த பைங்காநாடு தர்மசாஸ்தா ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இந்த சிறப்பு வழிபாட்டினை உள்ளூர் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு செய்தனர். மேலும் துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தி உணர்வோடு அவ்வூர் மக்கள் வழிபாடு செய்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பைங்காநாடு கிராமத்தில் உள்ள தர்மசாஸ்தா கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவுக்கு கமலா ஹாரிஸ் குடும்பத்தினர் நன்கொடை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News