உள்ளூர் செய்திகள்
மரக்கன்று நடும் போராட்டம் நடைபெற்ற காட்சி.

திருப்பூரில் சாலையை சீரமைக்க கோரி மரக்கன்று நடும் போராட்டம்

Published On 2021-12-07 08:07 GMT   |   Update On 2021-12-07 08:15 GMT
களிமண்ணால் தேங்கி இருந்த சாலையில் 15க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் சென்ற போது வழுக்கி விழுந்து படுகாயம் அடைந்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலத்திற்கு உட்பட்ட நெருப்பெரிச்சல் பகுதியில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற முறையில் இருக்கும் சாலைகளை செப்பனிடவும், அப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மரக்கன்று நடும் போராட்டம் இன்று நடைபெற்றது.

நெருப்பெரிச்சல் தோட்டத்துபாளையம் சாலையில் அஸ்வதி கம்பெனி அருகில் தேங்கியிருந்த சேறும் சகதியுமான சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மரக்கன்றுகள் நட்டனர். இப்போராட்டத்திற்கு தோட்டத்துபாளையம் மாதர் சங்க கிளைச்செயலாளர் மங்கலட்சுமி தலைமை வகித்தார். 

பல ஆண்டு காலமாக தோட்டத்து பாளையம் நெருப்பெரிச்சல் பகுதியில் வடிகால் வசதி இல்லாமல் சாலைகளில் கழிவுநீர் ,மழைநீர் தேங்கி சாலை குண்டும் குழியுமாகவும் சேறும் சகதியுமாகவும் உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தும் சூழ்நிலையில் அவ்வப்போது தற்காலிகமாக மண்ணை கொட்டி சரி செய்யும் ஏற்பாட்டை மட்டுமே மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். 

இந்தநிலையில் அண்மையில் மழை பெய்த சூழ்நிலையில் இப்பகுதியில் களிமண்ணால் தேங்கி இருந்த சாலையில் 15க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் சென்ற போது வழுக்கி விழுந்து படுகாயம் அடைந்தனர். எனவே இப்பகுதியில் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வடிகால் வசதியை ஏற்படுத்தி மழைநீர், கழிவுநீர் வெளியேறி செல்ல நிரந்தர ஏற்பாடு செய்ய வேண்டும். 

அத்துடன் மோசமான நிலையில் உள்ள இப்பகுதி சாலையை சீரமைக்க வேண்டும். பி.என்.ரோடு பூலுவப்பட்டி சந்திப்பில் இருந்து வாவிபாளையம் வரை குண்டும் குழியுமான சாலையை புதிய தார் சாலையாக மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Tags:    

Similar News