செய்திகள்
பள்ளி கட்டிடம் இடிந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

லாலாபேட்டை அருகே 3 வருடமாக இடிந்து கிடக்கும் அரசு பள்ளி

Published On 2020-09-16 10:18 GMT   |   Update On 2020-09-16 10:18 GMT
லாலாபேட்டை அடுத்த கள்ளபள்ளியில் அரசு பள்ளி கட்டிடம் இடிந்து 3 ஆண்டுகளாகியும் இதுவரை புதிய கட்டிடம் கட்டப்படவில்லை. எனவே புதிய கட்டிடம் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லாலாபேட்டை:

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளபள்ளியில் ஆதிதிராவிடர் அரசு நலப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி திறக்கப்படவில்லை. மிகவும் பழமை வாய்ந்த இந்த பள்ளிக்கூடத்தின் கட்டிடம் கடந்த 2017-ம் ஆண்டு தொடர் மழையால் நள்ளிரவில் இடிந்து விழுந்தது.

இரவு நேரம் என்பதால், எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. இதனையடுத்து பள்ளி தலைமையாசிரியர் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் நல அதிகாரிக்கு தகவல் தெரிவித்து புதிய கட்டிடம் கட்ட வலியுறுத்தினார். அதன்பேரில் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி இடிந்து விழுந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தருவதாக கூறி சென்றார். ஆனால் 3 வருடங்களுக்கு மேலாகியும், இதுவரை பள்ளி கட்டிடம் கட்ட தொடங்கவில்லை. தற்போது அதன் அருகே உள்ள வேறு ஒரு கட்டிடத்தில் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

மேலும் ஊர் பொதுமக்கள் சார்பாக பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இனிமேலாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News