ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயம்

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா

Published On 2022-01-27 04:46 GMT   |   Update On 2022-01-27 04:46 GMT
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா மார்ச் 11, 12-ந் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள அந்தோணியார் இருநாட்டு மீனவர்களுக்கும் கருணை தெய்வமாக விளங்குகிறார். ஆண்டுதோறும் இந்த ஆலயத்தில் பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

திருவிழாவில் இரு நாட்டினரும் கலந்து கொள்வார்கள். இலங்கைக்கு கச்சத்தீவு கொடுக்கப்பட்டாலும் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்து கொள்ள தமிழக மீனவர்கள் எந்தவித ஆவணங்களும் கொண்டு செல்ல தேவையில்லை.

இந்த நிலையில் இந்த ஆண்டின் கச்சதீவு அந்தோணியார் ஆலய திருவிழா வருகிற மார்ச் மாதம் 11, 12-ந்தேதிகளில் நடைபெறுகின்றது. இந்த திருவிழாவில் இலங்கையில் உள்ள பக்தர்கள் 500 பேருக்கு மட்டுமே அனுமதி உள்ளதாகவும், கொரோனா பரவல் உள்ளதால் தமிழக மீனவர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் கூறப்படுகின்றது.

கடந்த ஆண்டும் கொரோனா பரவலால் இந்திய பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாத நிலையில், 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி கிடையாது என்று அந்நாட்டில் இருந்து வெளியாகி உள்ள தகவல், மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி ராமேசுவரம் மீனவர்கள் கூறும்போது, கடந்த ஆண்டும் கொரோனா பரவலை காரணம் காட்டி தமிழக பக்தர்கள் யாரும் அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டும் அதே காரணத்தை காட்டி தமிழக பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்ற அறிவிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. இலங்கையிலுள்ள குறிப்பிட்ட சில பக்தர்கள் கலந்து கொள்ளலாம் என்பது போல் தமிழகத்தில் இருந்தும் குறைந்தபட்சம் 50 மீனவர்களை மட்டுமாவது இந்த ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும். இது தமிழக மீனவர்களின் உரிமையை பாதுகாக்க கூடிய திருவிழாவாக இருப்பதால் மத்திய மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்தி அனுமதி வழங்க வேண்டும்” என்றனர்.
Tags:    

Similar News