செய்திகள்

காங்கிரசுக்கு போட்டியாக குஜராத்தில் ரூ.625 கோடி மின்கட்டணம் தள்ளுபடி

Published On 2018-12-19 07:29 GMT   |   Update On 2018-12-19 07:50 GMT
காங்கிரசுக்கு போட்டியாக குஜராத் மற்றும் அசாமில் மின் கட்டணம், விவசாய கடன்களை தள்ளுபடி செய்து அம்மாநில பா.ஜனதா அரசுகள் உத்தரவிட்டுள்ளனர். #BJP #Congress #Gujaratgovernment
அகமதாபாத்:

5 மாநில சட்டசபை தேர்தல்களில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகியவற்றில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்த மத்திய பிரதேசத்திலும், சத்தீஷ்கரிலும் காங்கிரஸ் அரசு விவசாய கடன்களை ரத்து செய்தன. மத்தியபிரதேசத்தில் ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடனையும், சத்தீஷ்கரில் ரூ.6,100 கோடி வரையிலான விவசாய கடனையும் ரத்து செய்து அம்மாநில புதிய முதல்-மந்திரிகள் கமல்நாத், பூபேஷ் பாதேல் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் காங்கிரசுக்கு போட்டியாக குஜராத் மற்றும் அசாமில் மின் கட்டணம், விவசாய கடன்களை தள்ளுபடி செய்து அம்மாநில பா.ஜனதா அரசுகள் உத்தரவிட்டன.

குஜராத் மாநிலத்தில் விஜயரூபானி தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில அரசு குஜராத் கிராம மக்களின் ரூ.650 கோடி மின்சார கட்டணத்தை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.



இதுதொடர்பாக குஜராத் மின்சாரதுறை மந்திரி சவுரப்படேல் கூறும்போது, “கிராம பகுதிகளில் உள்ள 6.20 லட்சம் பேர் செலுத்த வேண்டிய ரூ.650 கோடி மின் கட்டணம் ஒரே தவணையில் தீர்வு காணும் திட்டத்தின் கீழ் தள்ளுபடி செய்யப்படுகிறது” என்றார்.

மேலும் அவர் கூறும்போது, “மின் இணைப்பு துண்டிக்கப்பட்டவர்கள் ரூ.500 மட்டுமே செலுத்தி தங்கள் இணைப்பை மீண்டும் பெற்றுக் கொள்ளலாம்” என்றார்.

அசாம் மாநிலத்தில் சர்பானந்தா சோனோவால் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் ரூ.600 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. அம்மாநில மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து அம்மாநில மந்திரி சந்திரமோகன் படோவரி கூறியதாவது:-

மந்திரிசபை கூட்டத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான விவசாய கடனை தள்ளுபடி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது விவசாயிகளால் வாங்கப்பட்ட கடனில் 25 சதவீதம் தொகை (அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம்) ரத்து செய்யப்படும். இதனால் 8 லட்சம் விவசாயிகள் உடனடியாக பயன் அடைவார்கள்.

மேலும் விவசாயிகள் வாங்கும் கடனுக்கான வட்டியில் 4 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்படுகிறது. அடுத்த நிதியாண்டு முதல் 19 லட்சம் விவசாயிகளால் வட்டி இல்லாமல் விவசாய கடன் வாங்க முடியும்.

இவ்வாறு அவர் கூறனார்.

இதேபோல மேலும் பல சலுகைகளை அம்மாநில அரசு அறிவித்தது. #BJP #Congress #Gujaratgovernment
Tags:    

Similar News