செய்திகள்
எடியூரப்பா

பள்ளிகள் திறப்பு குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம்: எடியூரப்பா

Published On 2020-10-10 02:21 GMT   |   Update On 2020-10-10 02:21 GMT
கர்நாடகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பெற்றோருக்கு எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் வருகிற 15-ந் தேதிக்கு மேல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகி வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் பள்ளிகள் திறப்பு குறித்த தகவல் குழந்தைகளின் பெற்றோரை ஆதங்கத்தில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடக அரசும், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து ஒரு தெளிவான தகவலை இதுவரை வெளியிடவில்லை. இதனால் பெற்றோர் குழப்பத்தில் சிக்கியுள்ளனர்.

இந்த நிலையில் பள்ளிகளை திறப்பது குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று குழந்தைகளின் பெற்றோருக்கு முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளை திறப்பது குறித்து ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து ஊடகங்களும் விவாதங்கள் நடத்தி வருவதை கவனித்துள்ளேன். எதிர்க்கட்சி தலைவர்களும் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மற்றும் எதிர்கால நலன் கருதி, பள்ளிகளை திறப்பதற்கு முன்பு அனைத்துக்கட்சிகளின் தலைவர்கள், கல்வித்துறை நிபுணர்கள், மூத்த அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி சாதக-பாதகங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். அதன்பின்னரே பள்ளிகளை திறப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். அதுவரை பள்ளிகளை திறப்பது குறித்து வெளியாகும் வதந்திகளை பெற்றோர் நம்ப வேண்டாம்.

இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News