ஆன்மிகம்
தீபாவளி

தீமையை அழித்து நன்மை பிறந்த நாள்... தீபாவளித் திருநாள்...

Published On 2019-10-26 05:58 GMT   |   Update On 2019-10-26 05:58 GMT
தீபங்களின் திருநாள் தீபாவளி. ‘தீபத்தின் ஒளி’ அதுவே தீபாவளி என்றும், தீபங்களை வரிசையாக ஏற்றி ஒளியைத் தருவதால் தீபாவளி என்றும் பல பெயர்க் காரணங்களைத் தன்னுள் கொண்டுள்ளது தீபாவளித் திருநாளாகும்.
தீபங்களின் திருநாள் தீபாவளி. ‘தீபத்தின் ஒளி’ அதுவே தீபாவளி என்றும், தீபங்களை வரிசையாக ஏற்றி ஒளியைத் தருவதால் தீபாவளி என்றும் பல பெயர்க் காரணங்களைத் தன்னுள் கொண்டுள்ளது தீபாவளித் திருநாளாகும்.

தீபாவளியின் வரலாறு

நேபாளத்துக்கு அருகே உள்ள பிரக்யோதிஷ்பூர் என்ற நாட்டை ஆண்ட மன்னனே நரகாசுரன். இவன் மக்களுக்கும், தேவர்களுக்கும் பல கொடுமைகளைச் செய்து வந்தவனாவான். பூமாதேவியின் மகனான நரகாசுரனின் பெயர் பவுமன் ஆகும்.

திருமால் அசுரர்களை அழித்த அசுரவதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுர குணமானது இவனுக்கு அதிகமாகவே இருந்தது. மனிதனாகப் பிறந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் அவனை ‘நரகாசுரன்’ என்று அனைவரும் அழைத்தனர். அனைவருக்கும் அச்சுறுத்தலாகவும், மிரட்டலாகவும் அவனது செயல்கள் ஒன்றன்பின் ஒன்றாக இருந்தன.

அவனது கடும் தவத்தை மெச்சி, அனைத்து உலகையும், உயிர்களையும் படைக்கும் பிரம்ம தேவன் அவனுக்கு ஒரு வரத்தை அதாவது அவன் வேண்டிய வரத்தை வேறு வழியின்றி அளிக்கிறார். அந்த வரமானது அவனது தாயாரின் கையால் மட்டுமே அவனுக்கு மரணம் நிகழ வேண்டும். வேறு யாரும் அவனை அழிக்க முடியாது என்பதாகும்.

இந்த வரத்தைப் பெற்ற பிறகு அவனது அட்டகாசம் மேலும் அதிகரித்தது என்றே சொல்லலாம். பல்வேறு கடவுள்களின் பதினாறாயிரம் மகள்களைக் கடத்தி வந்து அந்தப்புரத்தில் சிறை வைத்ததோடு அல்லாமல், கடவுள்களின் அன்னை என்று கூறப்படும் அதிதியின் காது வளையங்களையும் திருடியவன் நரகாசுரன் ஆவான். இதனால் அனைத்துக் கடவுள்களும், தேவர்களும் கிருஷ்ண பரமாத்மாவிடம் முறையிட்டனர்.

நரகாசுரன் பிரம்மனிடமிருந்து பெற்ற வரத்தை அறிந்திருந்த கிருஷ்ணர், தனது ரதத்தின் சாரதியாக மனைவி சத்யபாமாவை (இவர் பூதேவியின் மறு உருவம்) அழைத்துக் கொண்டு கிளம்புகிறார். நரகாசுரனுக்கும், கிருஷ்ணருக்கும் இடையே கடும் சண்டை மூள்கிறது. சண்டையின்போது நரகாசுரன் விட்ட அம்பானது தாக்கப்பட்டு கிருஷ்ண பகவான் மயக்கமடைகிறார். இதைப் பார்த்த சத்தியபாமா கோபமடைந்து நரகாசுரனைப் போருக்கு அழைத்தார்.

சத்தியபாமா பூமியின் அவதாரம் என்பதை உணராமல் அவரோடு நரகாசுரன் போர் புரியத் துவங்கினான். இதனையடுத்து சத்யபாமா, வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்து நரகாசுரனைக் குறிபார்த்துத் தாக்குகிறார். நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார்.

நரகாசுரன் இறக்கும் தருவாயில் தனது தாய் சத்யபாமா என்பதை அறிந்து, அம்மா நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட மக்களும், தேவர்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி, ஒளிமயமாகக் கொண்டாட வேண்டும் என்று வேண்டினான்.

இதனால் கிருஷ்ணபரமாத்மாவும், சத்யபாமாவும் அவனுக்கு அவன் வேண்டிய வரத்தைக் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகின்றது என்று புராணங்கள் கூறுகின்றன.

நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்ததால், கிருஷ்ண பகவான் எண்ணெய் தேய்த்து தலை முழுகினார். இன்றளவும் இதுவே தீபாவளியன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கமாகத் தொடருகிறது. இதனைக் கிருஷ்ணலீலை என்று புராணங்களில் கூறியிருக்கிறார்கள்.

தீபாவளியானது, தீபத்திருநாள் என்று அழைக்கப்படுவதற்கு மற்றொரு புராணக்கதையும் உள்ளது.

ராவணனை வென்று சீதையுடன் அயோத்திக்குத் திரும்புகிறார் ராமபிரான். அவர்கள் அயோத்திக்கு வந்த அன்று அமாவாசை இரவு நேரமாகும். இதனால், இருளில் வந்த அவர்களை வரவேற்கும் விதமாக அயோத்தி மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு அகல் விளக்குகளை ஏற்றி ஒளிகூட்டினர். இதனால்தான் தீபாவளிக்கு தீப ஒளித் திருநாள் என்ற பெயர் வந்தது.

தீபாவளி இந்தியாவில் மட்டுமல்லாமல் வங்காளதேசம், இலங்கை, பர்மா, மலேசியா ஆகிய வெளிநாடுகளிலும் வேறு பெயர்களில் வேறு முறைகளில் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன.

பண்டைய காலங்களில் பட்டாசுகளை இலை மற்றும் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி தயாரித்து வந்துள்ளனர்.

தீபாவளியன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து தலை குளிப்பது கங்கையில் நீராடியதற்குச் சமமாகக் கருதப்படுகின்றது. குளித்த பிறகு புத்தாடை உடுத்தி, இனிப்புடன் காலை உணவருந்தி பின்னர் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடுவதை அனைத்து வீடுகளிலும் பார்க்க முடியும்.

அந்த நன்னாளில் நம் வீட்டில் செய்த இனிப்பு, கார வகைகளை நம் உறவினர், தெரிந்தவர்களுக்கு கொடுக்கிறோம். வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கால்களில் விழுந்து ஆசீர்வாதத்தைப் பெறுகிறோம்.

ஆதரவற்ற சிறுவர், பெரியவர்கள் தங்கியிருக்கும் இல்லங்களுக்குச் சென்று நம்மால் முடிந்த உதவிகளைச் செய்து அவர்களின் முகத்திலும் சந்தோசத்தையும், புன்னகையையும் கொண்டு வர நம்மால் முடியும் என்று நம்புவோம். இதுபோன்ற நல்ல செயல்களை இதுபோன்ற பண்டிகை நாட்களில் செய்யும்பொழுது நம்முடைய சந்தோசம் மட்டுமல்லாமல் அவர்களது சந்தோசமும் பன்மடங்காகப் பெருக வழி செய்வோம்.
Tags:    

Similar News